Trending Topic

We bring you Articles, Poems, Stories, Inspirational Quotes and Speeches

Saturday, March 28, 2020

COVID 19 இனால் ஏற்படக்கூடிய உளவியல்சார் சவால்கள்

COVID 19 என்றால் என்ன?  

COVID 19 என அழைக்கப்படும் ஒரு வகையான வைரஸ் நோயை கண்டு உலகமே அதிர்ந்து போயுள்ளது. உயிரைக் கொள்ளும் இந்த கொரோனா தொற்று நோய் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவிலிருந்து ஆரம்பித்து இன்று சுமார் 180 ற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இன்றைய நாள் (26.03.2020) புள்ளிவிபரங்களின் படி உலகம் பூராகவும் இந்நோயினால் 462, 684 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் அத்துடன் 20, 834 இற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர் (உலக சுகாதார நிறுவனம்). இந்நிலைமை மேலும் மோசமடையக் கூடும் என சில கணிப்புகளும் எதிர்வுகூறல்களும் குறிப்பிடுகின்றன. இந்நோயின் தீவிரத்தையும் அது உலகளாவியரீதியல் மிக விரைவாகப் பரவுவதையும் கண்ட உலக நாடுகள் தமது நாடுகளில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி வருகின்றன. ஏனெனில் இந்நோய்கான தடுப்பு மருந்துகள் இது வரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவே வரும் முன் காப்பதே இதற்கான சிறந்தவொரு கட்டுப்பாட்டு வழிமுறை என அண்மைய அனுபவங்கள் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன.


ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் இக்கால கட்டத்தில் பொதுமக்கள் பலவகையான சமூக, பொருளாதார மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். உதாரணமாக வருமானம் அற்ற குடும்பங்கள் தமது நாளாந்த உணத் தேவையை பூர்த்திசெய்து கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர் என்பது கவலைக்குரிய விடயமாகும். மேற்குறிப்பிட்ட பிரதான பிரச்சினைகளுக்கு மேலதிகமாக மனங்களுக்குள்ளேயே மறைந்து இருக்கும் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய பிரச்சினையே மக்களின் மன ஆரோக்கியம் ஆகும்.

COVID 19 மன ஆரோக்கியம்சார் கண்ணோட்டம்


இந்நோய் காப்புடன் இணைந்ததாக தனிமைப்படுத்தப்படல், சமூக இடைவெளி பேணல், அதனுடன் இணைந்ததான தொழில் இழப்பு, வருமானமின்மை, பொருளாதாரச் சுமை போன்ற இன்னொரன்ன பல காரணிகள் தனிநபரது உளநல ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடியதற்கான சாத்தியக்கூறுகளாக தற்சமயம் காணப்படுகின்றது. ஏனைய பிரச்சினைகள் போல் அவை எளிதில் வெளிப் பார்வைக்குப் புலப்படுபவையல்ல. எனினும் அவை ஆரம்பத்திலேயே கவனத்திற் கொள்ளப்பட வேண்டியவை. பாதிக்கப்பட்ட மக்கள் மட்டுமன்றி ஏனையோருக்கும் உளநல ஆரோக்கியம் இக்காலகட்டத்தில் இன்றியமையாதது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் உள நல ஆரோக்கிய சேவைகள் (Counseling Services) இவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

எவ்வாறான உளநல ஆரோக்கியம் சார் பிரச்சினைகள் ஏற்படக்கூடும்


இத்தகைய நோய் சூழ்நிலைகளின் போது மக்கள் பரவலாக உணர்ச்சிவசப்படுதல், பயம் (Anxiety), பதட்டம், விரக்தி, நம்பிக்கையின்மை, எதிர்மறை எண்ணங்கள், பேரதிர்ச்சி (Trauma) போன்ற உளவியல் சார் சவால்களை எதிர்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன. இதற்கான காரணங்கள் பல உள்ளன. சில பேர் இந்நோயின் தீவிரத்தைக் கண்டு பயப்படுவார்கள். அவர்கள் இந்நோயின் தீவிரம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் அது எந்நேரம் தன்னை தாக்கிவிடுமோ என எண்ணி எண்ணியே மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுவர். சிலர் இதனை சாதாரணமாக எடுத்துக்கொண்டாலும் வேறு சிலருக்கு இதனை தாங்கிக்கொள்ளும் மனநிலை குறைவாகவே காணப்படலாம். ஏனெனில் ஒவ்வொருவரின் சிந்தனை மற்றும் மன ஆரோக்கிய நிலை என்பன மாறுபட்டன.

மேலும் எதிர்பாராத நேரத்தில் உடனடியாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் விளைவாக சிலர் ஏமாற்றங்களையும் சந்தித்திருக்கக்கூடும். உதாரணமாக இக்காலப்பகுதியில் பல பரீட்சைகள் மற்றும் வேலைகளுக்கான நேர்காணல்கள் தள்ளிப் போடப்பட்டுள்ளன, திட்டமிடப்பட்ட சில திருமணங்கள் பிற்போடப்பட்டிருக்கலாம், ஒழுங்குசெய்யப்பட்ட பிரயாணங்கள் கைவிடப்பட்டிருக்கலாம், நோயுற்றவர்களை சந்திக்க அவரின் நெருங்கியவர்களுக்கு இயலாமல் போயுள்ளது, உங்கள் அன்புக்குரிய ஒருவர் அல்லது நண்பர்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டிருக்கலாம், மத வழிபாடுகளைப் பின்பற்ற முடியாதுள்ளது, வியாபார நடவடிக்கைகளில் ஏற்பட்ட பாரிய நஷ்டம், சுய தொழில்கள் முடக்கம், வெளிநாடுகளில் இருக்கும் தமது நெருங்கிய உறவுகளை எண்ணி மனவேதனை என பல காரணங்கள் ஒருவரின் உள ஆரோக்கியத்தை இக்கால கட்டத்தில் பலவீனமடையச் செய்யக்கூடும்.

மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ள காரணங்களில் இன்னுமொரு மிக முக்கியமான காரணமும் காணப்படுகிறது. இந்நோயினால் 106 பேர் இலங்கையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சீனா, ஐக்கிய இராச்சியம், இத்தாலி, அமெரிக்கா போன்ற இன்னும் பல நாடுகளில் நாளொன்றுக்கு 50 ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். இந்நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களைப் பார்க்கவோ, மரணச் சடங்குகளை செய்து அவர்களை அடக்கம் செய்யவோ எம்மால் முடியாது. ஏனெனில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் பொழுது ஏனையோருக்கும் உடனடியாக தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புகள் மிக அதிகம் என்பதனால் வைத்தியசாலை நிர்வாகமே இச்செயற்பாடுகளை செய்கிறது. எனவே இவ்வாறான விடயங்கள் மக்களுக்கு மனவேதனையை கொடுத்துள்ளன என்பதும் நிதர்சனம். அதுமட்டுமன்றி நோயினால் பாதிக்கப்பட்டவர் பூரண குணமடைந்து வீடு வந்தாலும் அல்லது 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டவர் தடுப்பு முகாம்களில் இருந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டாலும் அக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அயலவர்கள் அவர்களை ஒதுக்கி வைக்கும் நிலை, அல்லது அச்சத்துடன் பார்க்கும் பொழுது குறித்த அந்த நபர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. மேலும் சிலர் இந்நோயை பற்றி தெளிவான விளக்கம் இன்றி தேவையற்ற பயங்களுக்கும், குழப்பங்களுக்கும் உள்ளாவதே மற்றொரு பிரதான காரணமாகும். இவ்வாறு இன்னும் பல நேரடியான மற்றும் மறைமுகக் காரணங்களை நாம் கூறிக்கொண்டே போகலாம்.

யார் எல்லாம் இலகுவில் உளவியல் சார் சவால்களை எதிர்கொள்ளக் கூடியவர்கள்
பெரும்பாலும் பாதிக்கப்படும் சாத்தியக்கூறு உடையோர் நோயாளர்கள், தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர், முதியோர், சிறுவர்கள், கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் இளைஞர்கள். சிலவேளை மன அளவில் நான் தைரியசாலி எனக் கூறிக்கொள்ளும் ஒருவரகவும் இருக்க முடியும். சாதாரண பொதுமக்களை விட வைத்தியத்துறைசார் வைத்தியர்கள், தாதியர்கள், ஏனைய ஊழியர்கள் உளவியல் சார் சவால்களை நாளாந்தம் எதிர்கொள்கின்றனர். இவர்களை பாதுகாக்க வேண்டியதும் அவர்களுக்கு மன ஆறுதல் அளித்து அவர்களை தைரியப்படுத்த வேண்டியதும் எம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

நாம் என்ன செய்ய வேண்டும்?


மேற்கண்ட நெருக்கடியான சூழ்நிலைகளில் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளநல சுகாதார சேவைகள் அவசியமாகின்றன.
  • ஒருவர் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு அவரின் நடத்தை அல்லது சிந்தனை இயல்பு நிலையை விட மாற்றமடைந்து காணப்பட்டால் அல்லது அவருக்கு உடனடியாக உளநல ஆலோசனை தேவைப்படுகிறது என நீங்கள் எண்ணினால் அவர்களை உளவளத் துணையாளர் (Counselor) உளவியலாளர் (Psychologist) அல்லது சமூகப்பணியாளர் (Social Worker) என யாராவது ஒருவரிடம் அழைத்துச் செல்லலாம். இவர்கள் மனஉளைச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருத்தமான ஆலோசனைகளை வழங்கி அவர்களை குணப்படுத்தக்கூடியவர்கள்/ ஆற்றுப்படுத்தக்கூடியவர்கள்.
  • நோய் பற்றிய குழப்பத்தில் அல்லது தெளிவில்லாது இருப்பவருக்கு தெளிவினை/சரியான புரிந்துணர்வினை வழங்குங்கள்.
  • உங்களுக்கு மகிழ்வு தரும் விடயங்களில் ஈடுபடுங்கள் (புத்தகம் வாசித்தல், கரம் விளையாடுதல், வரைதல்)
  • வீட்டில் உள்ள முதியவர்கள் மற்றும் சிறுவர்களை அவர்களுக்கு விருப்பமான விடயங்களில் ஈடுபட சந்தர்ப்பம் அமைத்து கொடுங்கள், ஊக்கப்படுத்துங்கள் (புத்தகம் வாசித்தல், கரம் விளையாடுதல், வரைதல், பாட்டுப் பாடல்)
  • யாரையும் நீண்ட நேரம் தனிமையில் இருக்க விடாதீர்கள் மாறாக அவர்களது வேலைகளில் நீங்களும் பங்கெடுத்து கொள்ளுங்கள், அல்லது உங்கள் வேலையில் அவர்களை பங்கெடுக்க அழைங்கள். உதாரணமாக நீங்கள் சமைக்கும் போது உங்கள் குழந்தைகளுக்கு சின்னச் சின்னதாக ஏதாவது பொறுப்புக்களை கொடுங்கள் அவர்களும் கற்றுக்கொள்ளட்டும்.
  • இளகிய மனம் உடையவர்கள் மற்றும் குழந்தைகளிடம் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அல்லது இறந்தவர்களின் எண்ணிக்கைகளை அவர்களுடன் அடிக்கடி பகிர்ந்து கொள்வதை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கைகளை பகிருங்கள் அது அவர்களின் பயத்தை குறைத்து ஆறுதலளிக்கும் நேர்மறையான எண்ணங்களை கொடுக்கும்.
  • வீட்டில் இருந்து அலுவலக வேலைகளை செய்பவராக இருப்பின் அது பற்றி அடுத்தவர்களுக்கு கூறுங்கள். இதனால் அவர்கள் உங்கள் வேலை நேரங்களில் தொந்தரவு செய்யமாட்டார்கள்.
  • புதிய உணவு ஒன்றைத் தயாரியுங்கள் மற்றும் உணவு வேளைகளில் ஒன்றாக உணவருந்துங்கள்.
  • உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள், ஆசிரியர்கள் போன்றோரோடு தொலைபேசி வாயிலாக உரையாடுங்கள், தகவல்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.
  • சிறுவர்களை பாடுதல், நடனம் ஆடுதல் மற்றும் கதை கூறல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள விடுங்கள்.
  • மனதிற்கு இதமான இசையினை அல்லது சமயப் பாடல்களை வீட்டில் ஒலிக்க விடுங்கள்.
  • தியானம் மற்றும் பிரார்த்தனைகளில் ஈடுபடுங்கள் அது உங்கள் மனதை ஒருநிலைப்படுத்தும்.
  • உடற்பயிற்சி செய்யுங்கள்

உள ஆரோக்கிய ரீதியிலும் கொரோனா வைரஸ் நோயினை முழுமையாக கட்டுப்படுத்த ஒன்றிணைவோம். இது பற்றிய தெளிவினை மக்கள் மத்தியில் கொண்டுசெல்வோம். மன உளைச்சளால் பாதிக்கப்படுவோரை இணங்கண்டு அவர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கி அவர்களை ஆற்றுப்படுத்துவோம். மன ஆரோக்கியமே அனைத்திற்கும் ஆதாரம்.

- தோ. சண்முகப்பிரியா -

No comments: