கடந்த வருட இறுதியில் இலங்கையில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடி நிலைமை பற்றி அனைவரும் அறிந்ததே. இதன்போது சர்வாதிகாரமான முறையிலும் மனம்போன போன போக்கிலும் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் எவ்வாறு நீதியின் முன்னிலையில் தூக்கி வீசப்பட்டது என்பதை கண்கூடாக கண்டோம். குறித்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் நீதியை வேண்டி நின்றவர்களுக்கும் சட்டத்தை நிலைநாட்டும் நிறுவங்களுக்கும் உறுதுணையாக காணப்பட்டது இலங்கை ஜனநயாக சோஷலிச குடியரசின் அரசியல் யாப்பு ஒன்று மாத்திரமே. யாப்பு ஒன்று எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்துவதற்கு, எதேச்சாதிகாரம் தோற்கடிக்கப்பட்ட, எமது தலைமுறைக்கு பரீட்சயமான கிட்டிய உதாரணமாக இதனை குறிப்பிடலாம்.
யாப்பு ஒன்றின் ஊடாகவே ஒவ்வொரு தனி நபருக்குமான உரிமைகள் மற்றும் சலுகைகள் உறுதிப்படுத்தப்படுகின்றன. யாப்பு என்பது ஓர் அரசாங்கம், சமூக அமைப்பு அல்லது நிறுவங்கள் எவ்வாறு இயங்க வேண்டும் என்பதை கோடிட்டுக் காட்டுகின்ற ஓர் ஆவணமாகும். அந்தவகையில், தற்பொழுது இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பள்ளிவாசல்களின் நிர்வாகம் உள்ளிட்ட இதர விடயங்கள் சட்ட யாப்புகளின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்டு வெற்றிகண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதனையே வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய விவகார திணைக்களம் என்பனவும் வலியுறுத்தி வருகின்றன.
எமது படுபிடிய கிராமத்திலும் மிக நீண்ட கால தேவையாக கருத்தப்பட்ட சட்ட யாப்பொன்று தற்பொழுதுள்ள நிர்வாகத்தினரால் தயாரிக்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு பள்ளிவாயல் நிர்வாகம் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்? அதில் ஊர் ஜமாத்தினரின் பங்களிப்பு எவ்வாறு காணப்படுகின்றது? ஊர் மக்களுக்கு காணப்படும் உரிமைகள் மற்றும் சலுகைகள் எவை? ஊரின் நிதி எவ்வாறு முகாமை செய்யப்பட வேண்டும்? போன்ற முக்கிய விடயங்களை உள்ளடக்கி இந்த சட்ட யாப்பு தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக, எந்தவித பாகுபாடும் இல்லாமல், சாந்தா தாரர் ஒருவருக்கு ஊரின் தலைவராக வரக்கூடிய சந்தர்ப்பத்தை இந்த சட்ட யாப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, படித்தவர் – பாமரர், செல்வந்தர் – ஏழை என எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைவரும் ஒரே சமமானவர்கள், யாருக்கு வேண்டுமானாலும் நிர்வாக சபை தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்பதாகும்.
கடந்த ஒரு தசாப்த காலமாக இலங்கை முஸ்லிம்களின் இருப்பு தொடர்பில் ஓர் அச்ச சூழ்நிலையையே நாம் அனைவரும் அனுபவித்து வருகின்றோம். முஸ்லிம்களின் மத கிரிகைகள், மத நம்பிக்கைகள், வழிபாட்டு தளங்கள் என்பன சந்தேக கண்கொண்டு பார்க்கின்ற துர்ப்பாக்கிய நிலைமையையே எமது சமூகம் முகங்கொடுக்கின்றது. குறிப்பாக பள்ளிவாசல்கள் மத்ரசாக்களின் செயற்பாடுகள் தொடர்பில் கேள்வி எழுப்பப்படுகின்றன. தற்பொழுது இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரதான சவாலாக இதனை குறிப்பிடலாம்.
இந்த சவால்களுக்கு சரியான பதிலாக; எமது பள்ளிவாயல்களில் என்ன நடக்கின்றன. எந்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது தொடர்பிலான எழுத்து மூலமான ஆவணம் ஒவ்வொரு பள்ளிவாயல்களிலும் காணப்படவேண்டும் என்பது தற்பொழுது வலியுறுத்தப்படும் ஒரு விடயமாகும். இது எதிர்காலத்தில் எமது சமூகம் எதிர்நோக்கவுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லக்கூடிய முன்னாயத்தமாகவும் காணப்படுகின்றது. இதற்கான சிறந்த ஆவணமாகவும் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணமாகவும் ஊரின் சட்ட யாப்பை குறிப்பிடலாம்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளின் போது பொலிசாரிடம் சென்று நீதி கேட்க வேண்டிய கசப்பான நிலைமைக்கு முகங்கொடுக்கவேண்டி ஏற்பட்டதை நீங்கள் அறிவீர்கள். அதன்போது எமது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள எமக்கான ஒரு யாப்பு இல்லாமல் பொலிசார் முன்னிலையில் தலைகுனிய வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டது.
தற்பொழுது நாட்டில் இடம்பெறும் நிகழ்வுகளை அவதானிக்கும் போது ஓர் ஊருக்கான சட்ட யாப்பொன்றின் அவசியம் தொடர்பில் தற்பொழுது உணரப்படும் காரணங்களை விட பன்மடங்கு அதிகமான காரணம் எமது எதிர்கால சந்ததியினருக்கு வர காத்திருகின்றது. அல்லாஹ் போதுமானவன்.!
அந்த சந்தர்ப்பத்தில் கைசேதப்படாமல் இவ்வாறான ஒரு தயார் நிலைமையை எமது எதிர்கால சந்ததியனருக்கு நாம் விட்டுச்செல்ல வேண்டும். அதுவே, நாம் அவர்களுக்கு செய்யும் ஸதகதுல் ஜாரியாவாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
அந்த வகையில் படுபிடியவுக்கான ஓர் சட்ட யாப்பு தற்பொழுது தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, நாம் எமக்குள் குழுக்களாக பிளவுபட்டு எதிரிக்கு களத்தை தயாரித்து கொடுக்காமல் ஒற்றுமை எனும் ஒரே கையிற்றைப் பற்றிப்பிடித்து எமக்கான பாதுகாப்பை நாமே உறுதிசெய்துகொள்வது காலத்தின் தேவையாகும்.
எனவே, நாம் படுபிடிய ஊர் மகள் என்றவகையில் கடந்த கால முரண்பாடுகளை மறந்து படுபிடிய வரலாற்றில் முக்கிய ஒரு நிகழ்வாக இதனை கருதி சகலரும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கி எமக்கான சட்ட யாப்பை நாமே நிறைவேற்றிகொள்வோம்.!
No comments:
Post a Comment