Trending Topic

We bring you Articles, Poems, Stories, Inspirational Quotes and Speeches

Wednesday, October 9, 2024

புதியதோர் அரசியல் கலாச்சாரத்தின் தேவைக்கான அறைகூவல்...

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கட்டளைப்படி கடந்த செப்டம்பர் 24 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய ஒன்பதாவது பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. இந்தப் பாராளுமன்றம் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் திகதி ஆரம்பமாகி 2024 செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி நள்ளிரவு வரை 390 நாட்கள் கூடியிருந்தன. ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்து வருட காலம் இன்னும் நிறைவடையவில்லை என்றாலும், அரசியலமைப்பின் 70 ஆம் உறுப்புரையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய பாராளுமன்றத்தைக் கலைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் கூடி இரண்டரை வருடங்களின் பின்னர் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

 
அதற்கமைய பத்தாவது பாராளுமன்றத்துக்கான மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் பொதுத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதற்கான வேட்புமனுக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை கடந்த ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 11 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை இடம்பெற்று வருகின்றது. அதன்படி புதிய பாராளுமன்றம் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி கூடவுள்ளது.
 
இந்நிலையில் புதிய பாராளுமன்றத்தில் யார் தமது ஆசனங்களைத் தக்க வைத்துக்கொள்கிறார்கள் என்பது தொடர்பில் நிச்சயமற்ற நிலை காணப்படுகின்றது. முன்னெப்போதும் போற்றல்லாமல் இம்முறை தேர்தலில் வேட்பாளர்கள் யார் என்பதை வெளிப்படுத்துவதில் கட்சிகள் பின்னடைவான ஒரு போக்கைப் பின்பற்றுவதைக் காணக்கூடியதாக உள்ளது. எது எவ்வாறாயினும், எதிர்வரும் 11 ஆம் திகதிக்குள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும். மக்கள் வாக்களிக்கக் கூடிய வேட்பாளர்களை முன்னிறுத்துவது கட்சிகளின் முன் உள்ள பாரிய சவாலாகக் காணப்படுகின்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இம்முறை தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற விடயத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதற்குக் காரணம், முன்பு போன்ற அரசியலை தற்பொழுது மேற்கொள்ள முடியாது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கக் கூடும்.
 
இந்த நிலையில் புதியதோர் அரசியல் கலாச்சாரத்தின் தேவைக்கான அறைகூவல் கடந்த சில வருடங்களாக விடுக்கப்பட்டு வருகின்றது. சிவில் சமூகம் மற்றும் பொதுமக்கள் மத்தியிலிருந்து இதன் தேவை முன்வைக்கப்படுகின்றது. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி, அரசியல் விவகாரங்களில் பொதுமக்களை அக்கறை செலுத்துவதற்குத் தூண்டியுள்ளது. சமூக ஊடகங்களில் பொதுமக்கள் மிகவும் தெளிவாகவும் நேரடியாகவும் தமது அபிலாஷைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். சம்பிரதாய அரசியல் மீதான மக்களின் அதிருப்தி வெளிப்படுத்தப்படுகின்றது.
 
பாராளுமன்றம் என்றாலே வீணாகப் பணத்தைச் செலவு செய்யும் ஓர் இடமாகவே பார்க்கப்பட்டது. பாரிய ஒரு நிதியை ஒதுக்கீடு செய்து இதனைப் பராமரிப்பது அவசியம் தானா என்ற கேள்வி பரவலாக எழுப்பப்பட்டு வருகின்றது. இலங்கையின் ஆட்சிக் கட்டமைப்பில் நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறை என்ற ஜனநாயகத்தின் மூன்று தூண்களில் ஒன்றாகப் பாராளுமன்றம் அமைந்துள்ளது. எனினும், இதன் பணிகள், செயற்பாடுகள் மற்றும் தேவைப்பாடு சரியான முறையில் மக்கள் மத்தியில் சென்றடையவில்லை என்பதாலே பாராளுமன்றம் தேவையா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது
 
மக்கள் பிரதிநிதித்துவம், சட்டம் இயற்றுதல், நிதி முகாமைத்துவம் மற்றும் மேற்பார்வை என்பன பாராளுமன்றத்தின் நாற்பெரும் பணிகளாகக் குறிப்பிடமுடியும். இந்த பணிகள் முறையாக இடம்பெறவேண்டும். நாட்டின் எதிர்காலத்தைத் தூர நோக்குடன் அவதானித்து அதன் ஊடக கொள்கைகள் மற்றும் புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். இந்த பாராளுமன்றத்தின் பணிகளைச் செய்யக்கூடிய சரியான பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட வேண்டும். இதற்காகச் சரியான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்பும் பணியைப் பொதுமக்கள் செவ்வனே செய்வதன் மூலம் இந்த நோக்கங்களை அடைந்துகொள்ள முடியும். இதற்கான சிறந்த  சந்தர்ப்பமாக இந்த பொதுத் தேர்தலைப் பயன்படுத்த வேண்டும்.
 
ஒரு நோய்க்கு நிவாரணம் தேடிச் சிறந்த வைத்தியரை நாடுகின்றோம். ஒரு வீடு கட்டுவதற்கு ஒரு சிறந்த கட்டடக் கலைஞரை அணுகுகின்றோம். அதேபோன்று ஒவ்வொரு துறையிலுமான தேவைகளைச் சரியான முறையில் பூர்த்தி செய்துகொள்ள அந்தந்தத் துறைசார்ந்த நிபுணர்களையே நடுகின்றோம். ஆனால் சட்டம் இயற்றும் பணியை மேற்கொள்ளப் பொதுமக்களாகிய நாம் எவ்வாறானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். ஒரு தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அதற்குப் பொருத்தம் இல்லாத ஒருவரைத் தெரிவு செய்து விட்டு அதன் நோக்கத்தை அடைய முடியாது. பொருத்தமானவர்களைத் தெரிவு செய்ய வேண்டிய பொறுப்பைச் சரியான முறையில் செய்யாமல், எதிர்பார்க்கப்பட்ட பணிகள் நிறைவேறுவதில்லை எனக் குற்றஞ்சாட்டுவது எந்தளவுக்கு நியாயமானது?
 
எனவே, பாராளுமன்றத்துக்குத் தகுதியானவர்களை எவ்வாறு இனங்காண வேண்டும், அதற்கான அளவுகோல் என்ன, வேட்பாளர்களை தெரிவுசெய்யும் போது கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள் என்ன என்பது தொடர்பில் சரியான தெளிவு இல்லாமல் இருக்கலாம். ஜனநாயகத்தை நிலைநாட்டும் நோக்கில் வேட்பு மனு வழங்கும் போது அரசியல்கட்சிகள் மற்றும் தலைமைகள் சில விடயங்கள் தொடர்பில் கருத்தில்கொள்ள அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. அந்த விடயங்களாவன

வேட்பாளர்கள் குற்றவாளியற்றவராக இருத்தல், இலஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபடாதவராக இருத்தல், சமூகவிரோத வியாபாரங்களில் ஈடுபடாதவராக இருத்தல், சுற்றாடலைப் பேணிப் பாதுகாப்பவராக இருத்தல், அரசியல் அதிகாரத்தைப் துஷ்பிரயோகம் செய்யாதவராக இருத்தல், ஊழல் நிறைந்த நிதிசார் ஒப்பந்தம் மற்றும் உடன்படிக்கைகளில் ஈடுபடாதவராக இருத்தல், பிரதேசக் குடியிருப்பாளராக அல்லது மக்களுடன் தொடர்புள்ளவராக இருத்தல் என்பவற்றைக் குறிப்பிட முடியும். அத்துடன், வேட்புமனு வழங்கும் போது பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவம் போன்ற விடயங்களும் கருத்திற் கொள்ளப்பட வேண்டும். இது மார்ச் 12 அமைப்பு கடந்த பொதுத் தேர்தல்களின் போது சமூக மட்டத்தில் கருத்து மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பிரகடனப்படுத்திய விடயங்களாகும். இது இந்தத் தேர்தலுக்கும் பொருந்தும்.
 
குற்றச்செயல்கள், துஸ்பிரயோகங்கள், மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படுவதற்குப் பொருத்தமற்றவர்கள் என்பதே இதன் பிரதான குரலாக காணப்படுகின்றது. ஆனால் இவ்வாரானவர்கள் போட்டியிடக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், அரசியல் கட்சிகள் இந்தக் விடயங்களுக்கு எவ்வாறு கரிசனை செலுத்தப் போகின்றது என்பது கேள்விக்குரியது. அரசியல் கட்சிகள் இவற்றைக் கண்டுகொள்ளாமல் இருந்தாலும் சமூக மட்டத்தில் அந்தந்த நபர்கள் தொடர்பான மதிப்பீடுகள் காணப்படுகின்றன. இவற்றை வைத்து அந்தந்த வேட்பாளர்கள் தொடர்பாக வாக்காளர்களுக்கு தீர்மானம் எடுக்க முடியும். தமது வாக்குகளை பயன்படுத்துவதன் மூலம் மோசடி அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய சக்தி வாக்காளர்களாகிய பொது மக்களிடமே காணப்படுகின்றது. 

இதன் மூலம் தமது வாக்குகளுக்குப் பெறுமதி சேர்த்து, பாராளுமன்றத்தின் பணிகளை செய்யக்கூடிய, தகுதியானவர்களை தெரிவு செய்து அனுப்புவது எமது கடமையாகும். இதன் மூலம் பொருத்தமான மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்து ஆரோக்கியமான சட்டவாக்கத் துறையின் பங்காளராகுவோம்.

நுஸ்கி முக்தார்,
ஊடக அதிகாரி,
இலங்கை பாராளுமன்றம்.

(நன்றி: தமிழன் 2024.10.08)




No comments: