இலங்கையின் அடுத்த ஐந்து ஆண்டுகளை ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி எதிர்வரும் செப்டம்பர் 21 என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில் இன்று 15 ஆம் திகதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படுவதற்கு பல மாதங்களுக்கு முன்பிருந்தே வேட்பாளர்கள் தமது பிரச்சார நடவடிக்கைகளை முடக்கி விட்டிருந்தனர். இதில் குறிப்பாக சமூக ஊடகங்களின் மூலம் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் முக்கிய இடத்தை பிடிக்கின்றது. இலங்கையின் சனத்தொகையில் 50% அதிகமானவர்கள் இணையத்தளத்தை பயன்படுத்துவதை தரவுகள் மூலம் காணக்கூடியதாக உள்ளது. அதிலும் விஷேடமாக 34.2 வீதமானவர்கள் சமூக ஊடக பயனர்களாக உள்ளதாக இவ்வருட ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. அந்த அடிப்படையில் சமூக ஊடகங்களின் பயனர்களை இலக்காகக் கொண்ட தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றமை காணக்கூடியதாக உள்ளது.
அந்த வகையில் எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்கவிருக்கும் வாக்காளர்களாகிய நாம் இந்த பிரச்சார உத்திகள் மற்றும் மூலங்கள் தொடர்பான சரியான புரிதலுடன் இருப்பது முக்கியமானதாகும்.
சமூக ஊடக பிரச்சார கட்டமைப்பு
சமூக ஊடகங்களில் கட்டணம் செலுத்தி மேற்கொள்ளும் பிரச்சார முறைகள் ஒரு பிரத்தியேக கட்டமைப்பை கொண்டு இயங்குகின்றன. சம்பிரதாயபூர்வமான ஊடகங்களான தொலைக்காட்சி, பத்திரிகைகள் மற்றும் வானொலி என்பவற்றில் செய்யப்படும் விளம்பரங்களுக்கும் சமூக ஊடங்களில் மேற்கொள்ளப்படும் விளம்பரங்களுக்கும் இடையே கட்டமைப்பு ரீதியான வேறுபாடுகள் காணப்படுகின்றன. சம்பிரதாய ஊடகங்களில் விளம்பரங்கள் பொதுவாக அனைத்துத் தரப்பினரையும் இலக்காகக் கொண்டே மேற்கொள்ளப்பட வேண்டும். சம்பிரதாய ஊடகங்களின் இலக்குக் குழுக்களை வகைப்படுத்துவது கடினமானது. ஆனால் சமூக ஊடகங்களில் பயனர்களை வகைப்படுத்துவது இலகுவானது. பயனர்களின் வயது, பால், இடம் போன்ற வகைகள் மூலம் சமூக ஊடக பயனாளர்களை வகைப்படுத்தும் அதேவேளை, அவர்களின் விருப்பு வெறுப்புகள், சமூக ஊடகங்களை அவர்கள் பயன்படுத்தும் விதம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டும் வகைப்படுத்த முடியும்.
சமூக ஊடக நிறுவனங்களை பொருத்தமட்டில் அவை வர்த்தக நோக்கங்களைக் கொண்ட நிறுவனங்களாகும். நாம் அதனை பயன்படுத்துபவர்களாக எந்தவித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக பயன்படுத்தும் அதேவேளை எமது தரவுகளை அந்தந்த நிறுவனங்கள் அவர்களது வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்துகின்றன. பயனர்களின் சமூக ஊடகப் பாவனையை அடிப்படையாகக் கொண்டு அவர்களை பல்வேறு வகையான வகைப்படுத்தல்கள் செய்து, அந்தத் தரவுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட இலக்கு குழுக்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான பிரத்தியேகமான விளம்பரங்களை காண்பிக்கும் கட்டமைப்பு காணப்படுகின்றது.
சமூக ஊடகப் பிரச்சாரங்கள் மீதான வேட்பாளர்களின் ஆர்வம்
சம்பிரதாயபூர்வ ஊடகங்களைப் போன்றல்லாது சமூக ஊடகங்கள் அரசியல்வாதிகளுக்கு பரந்துபட்ட மக்களை சென்றடைவதற்கு இலகுவான வழியாகக் காணப்படுகின்றது. அத்துடன் அவர்களது செய்திகளை பிரத்தியேகமான வகைப்படுத்தலில் பல்வேறு குழுக்களுக்கு சென்றடையச் செய்கின்றது. இந்த ஒவ்வொரு வகையினருக்கும் அவர்களின் விருப்பு வெறுப்புகளை அடிப்படையாகக் கொண்ட பிரத்தியேகமான செய்திகள் வடிவமைக்கப்பட்டு காண்பிக்கப்படுகின்றது. இது அரசியல்வாதிகளுக்கு தமது வாக்காளர்களுடனான நேரடியான கலந்துரையாடலை அல்லது தொடர்பு களைஏற்படுத்த வழி அமைக்கும் அதேவேளை வாக்காளர்களின் கருத்துக்களை மற்றும் பின்னூட்டங்களை நேரடியாகப் பெற்றுக் கொள்ளவதற்கும் ஊடகமாக காணப்படுகின்றது. இதனால் அரசியல்வாதிகளும் இந்த சிறப்பியல்புகளைக் கொண்ட கட்டமைப்புக்கு ஆர்வத்தை செலுத்துகின்றனர்.
சமூக ஊடகப் பிரச்சாரங்கள் வாக்காளர்களின் தீர்மானத்தில் மேற்கொள்ளும் தாக்கம்
இம்முறை ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களில் சமூக ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கிற நிலையில் வாக்காளர்களின் தீர்மானத்தில் பல்வேறு வழிகளில் தாக்கம் செலுத்தும் ஒரு ஊடகமாக காணப்படுகின்றது. குறிப்பாக வாக்காளர்களின் கருத்தை வடிவமைக்கவும் அவர்களின் தீர்மானங்களில் மாற்றங்களைக் கொண்டு வரவும் சமூக ஊடகங்கப் பிரச்சாரங்களுக்கு முடியும்.
இது இவ்வாறு இருக்க, வேட்பாளர்களுக்கு இடையிலான கடுமையான போட்டி இந்த சமூக ஊடகங்களை எதிர்மறையாகவும் போட்டி வேட்பாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் பயன்படுத்துகின்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. தவறான தகவல்கள், திரிவுபடுத்தப்பட்ட புகைப்படங்கள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இந்த பிரச்சாரங்களில் முக்கிய இடத்தை பிடிக்கும். அதனால், வாக்காளர்களாகிய எமது திரையில் தோன்றும் புகைப்படங்களோ காணொளிகளோ உண்மையானது என்று நம்ப முடியாது. திரிவுபடுத்தப்பட்ட புகைப்படங்கள் அல்லது தவறான தகவல்களை அடங்கிய செய்திகள் பகிரப் படலாம். எனவே இந்தத் தொழில்நுட்ப விடயங்கள் பற்றிய தெளிவுடன் இருந்து எமது தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். அதேபோன்று, எம் முன்னே வரும் தகவல்களை சரி பார்த்து, வடிகட்டி எடுக்க வேண்டியதன் பொறுப்பும் எம்மிடமே உள்ளது.
(நன்றி: விடிவெள்ளி - 15.08.2024)
No comments:
Post a Comment