Trending Topic

We bring you Articles, Poems, Stories, Inspirational Quotes and Speeches

Thursday, December 11, 2025

தித்வா சூறாவளியின் கோரப்பிடியிலிருந்து மீண்டெழும் கெலிஓயா: ஒருங்கிணைக்கப்பட்ட பொறிமுறையாக கெலிஓயா அபிவிருத்தி நிதியம்


தித்வா புயல் 27.11.2025 ஆம் திகதி இலங்கை மீது சீறியபோது, அது வெறும் நீரையும் மண்ணையும் மட்டும் புரட்டிப் போடவில்லை, அது மக்களின் வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டியது. இலங்கையிலேயே கண்டி மாவட்டம்தான் மிக மோசமாகப் பாதிப்புகளைச் சந்தித்தது. கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டபோது, சீறிப் பாய்ந்த வெள்ளம் கெலிஓயா நகரையும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளையும் முற்றிலுமாகச் சிதைத்தது. கடைகளும் வீடுகளும் என அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி, மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.

அனைத்தையும் எடுத்துச் சென்ற தித்வாவுக்கு மனித நேயத்தையும் மன தைரியத்தையும் எடுத்துச் செல்ல முடியாமல் போனது. அந்த வகையில் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான உறுதியும் போராட்டமும் இப்பகுதி மக்களிடையே தற்போது எழுச்சி பெற்று வருகிறது.

கெலிஓயா மற்றும் அதனை அண்மித்த பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்பும் வகையில் அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகளை முறையாக நடத்திச் செல்ல பிரதேச மக்கள் ஒன்றிணைந்து ஒரு முன்மாதிரியான வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். குறிப்பாக, பாதிக்கப்பட்ட வணிகங்களை மீண்டும் ஆரம்பிக்க உதவுவதும், பொதுமக்களை இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டுவரும் நோக்கிலும் இந்த ஒருங்கிணைந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆக்கத்தை அடிப்படையாகக் கொண்டு 
NotebookLM ஊடாக தயாரிக்கப்பட்ட விளக்கக் காணொளி


அனர்த்த காலங்களில் உதவி முயற்சிகள் சிதறிப்போவது இயல்பு. ஆனால், அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் கெலிஓயா மக்கள், முறையான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு கட்டமைப்பை உருவாக்கினர். உடுநுவரை ஜம்மியத்துல் உலமா மற்றும் உடுநுவரை பள்ளிவாசல் சம்மேளனம் ஆகியன இணைந்து கெலிஓயா அபிவிருத்தி நிதியம் (GDF) என்ற நிறுவனத்தை உடனடியாக ஆரம்பித்தன. 

வெறும் வழிபாட்டுத் தலமாக இருந்த எலமல்தெனிய ஜும்மா பள்ளிவாசல், நிவாரணப் பணிகளுக்கான பிரதான ஒருங்கிணைப்பு மத்திய நிலையமாக மாற்றியமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் இயங்கும் மத்திய நிலையாக செயற்பட்டு வருகின்றது. கழுகமுவ, கெலிஓயவத்த, புதிய எல்பிட்டிய, பழைய எல்பிட்டிய, ஹேந்தெனிய, தெல்லங்க மற்றும் இலுக்குவத்த ஆகிய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உள்ளடக்கி இந்த நிதியம் செயற்படுகின்றது. நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்த நிவாரணப் பொருட்களை முறையாகப் பதிவுசெய்து, தேவையறிந்து விநியோகிக்க நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்த அணுகுமுறை நெருக்கடி காலங்களில் மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் எவ்வளவு இன்றியமையாதது என்பதை நிரூபிக்கிறது.

எலமல்தெனிய ஜும்மா பள்ளிவாசல்

அந்த வகையில் அனர்த்தம் நிகழ்ந்த உடனேயே ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சியின் ஊடாக துரிதமாக ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதற்கமைய, உடுநுவரை பகுதியைச் சேர்ந்த 17 ஊர்களின் ஒத்துழைப்புடன் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சமைத்த உணவுகள் மூன்று நேரமும் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

கெலிஓயா அபிவிருத்தி நிதியத்தின் கீழ் காணப்படும் பாதிப்புக்குள்ளான இந்தப் பகுதிகளிலிருந்து சுமார் 2000 குடும்பங்களுக்கு இந்த சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், சுமார் 650 வர்த்தக நிலையங்கள் இப்பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பான்மையான வர்த்தக நிலையங்கள் கெலிஓயா நகரில் உள்ள வர்த்தக நிலையங்களாகும்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் உதவிக்கரம் 

இந்நிலையில் துப்பரவுப் பணிகள் இன்றியமையாத ஒன்றாகக் காணப்படுகின்றது. அதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தொண்டர்கள் வருகை தந்து வீடுகளையும், வர்த்தக நிலையங்களையும் துப்பரவு செய்வதற்கான உதவிகளை செய்துவருகின்றனர். இந்தப் பணிகளும் கெலிஓயா அபிவிருத்தி நிதியம் ஊடாகவே ஒருங்கிணைக்கப்பட்டு நேர்த்தியாக முன்னெடுக்கப்படுகின்றன. நீர் இணைப்பு இன்னும் சீர் செய்யப்படாததன் காரணமாக துப்பரவு செய்வது கடினமாகக் காணப்படுகின்றது.  

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் வழங்கும் வகையில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வெள்ள நிவாரணங்கள் அனுப்பப்படுகின்றன. இதற்காக எலமல்தெனிய ஜும்மா பள்ளிவாசல் பிரதான நிலையமாகச் செயற்பட்டு வருகின்றது. உலர் உணவுகள், வீடுகளுக்குத்தேவையான அத்தியாவசிய பொருட்கள், வர்த்தக நிலையங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தேவையான பொருட்கள், மாணவர்களின் கல்விக்குத் தேவையானவை உள்ளிட்ட பல்வேறு உதவிகள் இங்கு வந்தடைகின்றன. அவற்றை முறையாகப் பதிவு செய்து, களஞ்சியப்படுத்தும் நடவடிக்கைகள் இங்கு இடம்பெறுகின்றன. 

முறையான தகவல் திரட்டும் பணி

இந்த நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் இன்னுமொரு அணுகுமுறையாக கெலிஓயா அபிவிருத்தி நிதியம், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை ஒருங்கிணைத்து, சேதங்களை மதிப்பிடும் ஒரு முறையான தகவல் திரட்டும் பணியையும் நடத்தி வருகின்றது. பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களின் உண்மையான சேதத்தின் அளவைப் புரிந்துகொள்ள இந்தத் தரவு சார்ந்த உத்தி மிக முக்கியமானது. இந்தத் தகவல் திரட்டும் வேலைத்திட்டம் ஊடாக சேதம் தொடர்பான பல்வேறு புள்ளிவிபரங்களைப் பெறுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இது நிவாரணப் பணிகளை உண்மையான தரவுகளின் அடிப்படையில் இலக்கு வைத்து, திறம்படச் செயற்படுத்த உதவுகின்றது. 

பொருளாதாரமே சமூகத்தின் முதுகெலும்பு: வர்த்தகத்தை மீட்டெடுப்பதில் முதன்மை கவனம்

கெலிஓயா அபிவிருத்தி நிதியம், சமூகத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் தனது முக்கிய கவனத்தைச் செலுத்தி வருகின்றது. பொருளாதாரமே "சமூகத்தின் முதுகெலும்பு" என்ற அடிப்படையில், இந்த வெள்ள அனர்த்தம் காரணமாக கெலிஓயா மற்றும் அன்மித்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட வர்த்தக நிலையங்களைக் கட்டியெழுப்புவது, அவற்றுக்கு ஆதரவளிப்பது இந்த கெலிஓயா அபிவிருத்தி நிதியத்தின் பிரதான ஒரு குறிக்கோளாகும். எனவே, இந்த ஒருங்கிணைந்த முயற்சிகள் வெறும் நிவாரணப் பொருட்களை வழங்குவதோடு நின்றுவிடாமல், பாதிக்கப்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் எனப் பலதரப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்கும் நோக்கில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய, உடனடியாக ஆரம்பிக்க முடியுமான சிறிய கடைகளை மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன. 

அத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு, பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணங்களைப் பெற்றுக்கொள்வதற்கான வழிகாட்டல்களும் இந்த ஒருங்கிணைப்புத் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. 

கல்வியை மீட்டெடுப்பதில் கவனம்

கட்டடங்களையும் வர்த்தகத்தையும் மீட்டெடுப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் ஒரு சமூகத்தின் எதிர்காலத்தை உறுதி செய்வது. வெள்ளத்தால் சீர்குலைந்த கல்விச் சூழலை ஸ்திரப்படுத்துவது ஒரு முக்கியப் பணியாகக் காணப்படுகின்றது. பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்விக்கான தடைகளைச் சரிசெய்து, அவர்கள் மீண்டும் மன நிம்மதியுடன் கல்வி கற்க வழிவகை செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு சமூகம் பேரழிவிலிருந்து முழுமையாக மீள்வதற்கு, அதன் அடுத்த தலைமுறையினரின் வளர்ச்சியில் முதலீடு செய்வது அவசியம் என்பதை இந்த முயற்சி எடுத்துக் காட்டுகின்றது.

சவால்கள் மிகப் பெரியவை. ஆனால், ஒருபோதும் தளராத மன உறுதியை எந்த அனர்த்தத்தாலும் உடைக்க முடியாது. மீண்டும் புதுப்பிக்கப்பட்ட ஒவ்வொரு சிறு கடையும், வீடும் கெலிஓயாவின் ஒளிரும் எதிர்காலத்திற்கான சாட்சியாக இருக்கும். 

✍️ நுஸ்கி முக்தார்

(நன்றி: விடிவெள்ளி - 2025.12.11)

Ditwah சூறாவளிக்கு முன்னர் மற்றும் பின்னர் கெலிஓயா நகரமும்
அதனை அண்மித்த பகுதிகளும் Sentinel-2 செய்மதி மூலம் எடுக்கப்பட்ட படங்கள்.








No comments: