Trending Topic

We bring you Articles, Poems, Stories, Inspirational Quotes and Speeches

Wednesday, March 25, 2015

நாட்டின் அபிவிருத்தியில் சமூகப் பணிக் கல்வியின் பங்கு இன்றியமையாதது

ஒரு நாட்டின் அபிவிருத்தி வெறுமனே பௌதீக வளங்களின் அவிவிருத்தியால் மாத்திரம் இடம்பெற முடியாது. மாறாக அவிபிருத்தி பூரணப்பட வேண்டுமானால் ஒப்பீட்டடிப்படையில் மனித வளங்களின் அபிவிருத்தியும் ஏற்பட வேண்டும். இவ்வாறான பௌதீக வளம் மற்றும் மனித வளம் உட்பட்ட சமூக அபிவிருத்தியை கொண்டே ஒரு நாட்டின் அபிவிருத்தியை அளவிட முடியும்.
அபிவிருத்தியை இலக்காக கொண்டு எந்தளவு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டாலும் அதன் பூரண பயனை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அபிவிருத்தி என்பது மக்களின் உண்மையான தேவையாக மாறவேண்டும். மேலும் இடம்பெறும் அபிவிருத்தி திட்டங்கள் மீது அதன் பயனர்களின் மற்றும் நாட்டு மக்களின் நம்பிக்கை ஏற்படவேண்டும். சாதக மனப்பாங்கு ஏற்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் அபிவிருத்தியின் பிரதிபலன்களை மக்களை சென்றடையச் செய்து நாட்டில் சமூக அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும்.

சமூக அபிவிருத்தியை ஏற்படுத்துவதில் சமூகப்பணியின் பங்களிப்பு மிக அவசியமான ஒன்றாக தற்பொழுது உலகம் பூராகவும் கருதப்படுகின்றது. அபிவிருத்தி அடைந்த நாடுகளை நோக்கும் போது அவற்றின் அபிவிருத்தியில் சமூகப் பணியின் பங்கு முக்கிய இடம்பிடித்திருப்பதை கண்டுகொள்ளக் கூடியதாகவுள்ளது. எமது நாட்டைப் பொருத்தவரையிலும் சமூகப் பணியின் அவசியம் அதிகரித்துச் செல்வதை உணரக்கூடியதாகவுள்ளது.

எமது நாட்டில் சுமார் மூன்று தசாப்த காலமாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் விளைவாக ஏற்பட்ட இடம்பெயர்வு, அகதி முகாம் வாழ்க்கை, அங்கவீனம், சொத்தழிவுகள், பெண்களை தலைமையாக கொண்ட குடும்பங்கள் போன்ற விடயங்கள் காரணமாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பதிப்புக்கள் சமூக மட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. அதேபோன்று யுத்தத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள அமைதியான சூல்நிலையில் வேறு வகையிலான புதிய பிரச்சினைகள் இனங்காணப்பட்டுள்ளன. நல்லிணக்கம், மூவின மாக்கள் மத்தியிலும் நட்புறவை ஏற்படுத்துவதில் இனவாதம், மதவாதம் போன்றன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
மாறிவரும் உலகில் நவீன தொழில்நுட்பத்தின் முறையற்ற பயன்பாட்டால் இளவயதினர் மத்தியில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள், தற்கொலை, போதைப்பொருள் பாவனை அதிகரித்தல், அதிகரித்துவரும் வயோதிபர்களின் சனத்தொகை, சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகளின் அதிகரிப்பு, உறவு முறையில் விரிசல் மற்றும் தலைமுறை இடைவெளியை சரியாக புரிந்து கொள்ளாததன் விளைவாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் என பல பிரச்சினைகளை எமது நாட்டில் சமூகப்பிரச்சினைகளாக அடையாலப்படுத்தலாம்.
இவ்வாறான சமூகப்பிரச்சினைகளை தனிநபர் ரீதியாகவும் (Case Work) குழுக்கள் ரீதியாகவும் (Group Work) சமூக ரீதியாகவும் (Community Work) சமூக நல நிர்வாகம் (Social Welfare Administration) சமூக ஆராய்ச்சி (Social Research) மற்றும் சமூக நடவடிக்கை (Social Action) போன்ற வழிமுறைகள் மூலம் தீர்வுகளை வழங்குவதே சமூகப்பணியாகும் (Social Work). இதனை மேற்கொள்ளக் கூடிய தொழில்வான்மை தகைமை கொண்ட சமூகப் பணியாளர்களை (Social Workers) உருவாக்குவதும் அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதும் அவர்களுக்குரிய சூழலை அமைத்துக் கொடுப்பதும் தேவையாகவுள்ளது.
இலங்கை சமூகப்பணிக் கல்லூரி
National Institute of
Social Development
சமூக சேவைகள் அமைச்சின் கீழ் அமையப்பெற்றுள்ள தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் பிரதான ஒரு பிரிவாக இலங்கை சமூகப்பணிக் கல்லூரி இயங்கி வருகின்றது. தொழில் வான்மையான சமூகப்பணியாளர்களை (Professional Social Workers) சமூக மற்றும் முகாமைத்துவ மட்டங்களில் செயலாற்றும் சமூகப்பணியாளர்களின் அறிவு, திறன், என்பவற்றை மேம்படுத்துவதும், சமூகப்பணியாளர்களை பயிற்றுவிப்பதும் இதன் பிரதான செயற்பாடாகும். 1952 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தில் 1992ஆம் ஆண்டின் 41ம் இலக்க தேசிய சமூக அபிவிருத்தி சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இலங்கை சமூகப்பணிக் கல்லூரியில் பின்வரும் கற்கை நெறிகள் நடாத்தப்படுகின்றன. இவை இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டவையாகும்.

1. சமூகப்பணி முதுமாணி கற்கைநெறி (MSW)
2. சமூகப்பணி இளமாணி கற்கைநெறி (BSW)
3. சமூகப்பணி டிப்ளோமாகற்கைநெறி (DSW)

சமூகப்பணி முதுமாணி கற்கைநெறி (MSW)
விசேடமாக முகாமை நிலை மட்டங்களில் சமூகப் பணி துறையிலும் சமூக நலன்புரி துறையிலும் தொழில்வான்மையாளர்களை உருவாக்குவதன் மூலம் நாட்டின் சமூக அபிவிருத்திக்கு பங்களிக்கக் கூடிய சமூகப் பணியாளர்களை உருவாக்குவதே இக் கற்கைநெறியின் நோக்கமாகும்.
சமூகப்பணி இளமாணி கற்கைநெறி (BSW) 
2005ஆம் ஆண்டி ஆரம்பிக்கப்பட்ட இக் கற்கைநெறியானது பல்லின மக்கள் வாழும் இலங்கையில் சமூக அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யக்கூடிய வகையில் சமூக நலன்புரி சேவை முகாமைத்துவத்துக்கான திறனும் ஆற்றலும் பயிற்சியும் கொண்ட, சமாதனம் நல்லிணக்கம் என்பவற்றை ஊக்குவிக்ககூடிய சமூகப்பணியாளர்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். நான்கு வருட பூரன கால பாடநெறியாக இது அமைவதுடன் வகுப்பறை விரிவுரைகள் மற்றும் களப்பயிற்சிகளும் கொண்டதாகும். ஆங்கிலம்,சிங்களம்,தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் இப்பாடநெறியை தொடர முடியும்.
சமூகப்பணி டிப்ளோமா கற்கைநெறி (DSW)
பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற தகுதியுடைய அல்லது அரச திணைக்களங்களில் மூன்று வருட சேவைகால அனுபவமுள்ளவர்களுக்கு வடிவமைக்கப்பட்ட பாட நெறியாகும். இரண்டு வருட பூரணகால பாடநெறியில் வகுப்பறை விரிவுரைகள் மற்றும் கள யிற்சிகளும் உள்ளடங்கும். சமூகப்பணியாளர்களின் பங்களிப்பை நம் நாட்டு அபிவிருத்தி தேவைகளுக்கு பெற்றுக்கொள்ளும் வகையில் சமூக பணித்துறையில் பயிற்றப்பட்ட மனிதவள தேவையை நிறைவு செய்யும் நோக்கமாக கொண்டு இப்பாடநெறி மேற்கொள்ளப்படுகின்றது.

மேற்படி கற்கை நெறிகள் அனைத்தும் இலங்கை சமூகக் கட்டமைப்பில் காணப்படும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தேவைகள் அம்ற்றும் புதிய போக்குகளை அடிப்படையாக கொண்டு காலமாற்றத்திற்கேற்ப மாறக்கூடிய பாடத்திட்டங்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்படுகின்றன. கற்கை நெறிகள் தொடர்பான தகவல்களை www.nisd.lk எனும் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

தற்போதைய இலங்கை சமூகக் கட்டமைப்பு முகங்கொடுக்க வேண்டிய வெற்றிகொள்ள வேண்டிய தடைகள் , சவால்கள் ஏராளம் காணப்படுகின்றன. இவைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள சமூகத்தின் அனைத்து மட்டங்களினதும் விரிவுபடுத்தப்பட்ட பங்களிப்பு அவசியமானதாகும். இவ்வாறன செயற்பாடுகள் கொள்கை வகுப்பாளர்கள், திட்டமிடலாளர்கள் முதல் கிராமிய மட்டம் வரையிலும் சென்றடையச் செய்வதே சமூக அபிவிருத்தியை உறுதிப்படுத்துவதாக அமையும்.
இதற்கு தொழில்வாண்மை ரீதியான வழிகாட்டல் மற்றும் தலைமைத்துவம் அவசியமானதாகும். இதன் மூலமே நாட்டின் சமூக அபிவிருத்தியை வெற்றிகரமாக அடைய முடியும். ஆகவே தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் சமூகப்பணி கல்வி மூலம் நாட்டுக்கும் சமூகத்துக்கும் பங்களிப்பு செய்ய முடியும் என்பதில் ஐயமில்லை.
இலங்கை சமூகப்பணிக் கல்லூரியில் கற்கை நெறிகளை தொடர்ந்த 38 பட்டதாரிகளுக்கும் 150 டிப்ளோமாதாரிகளுக்குமான பட்டமளிப்புவிழா இன்று (25.03.2015) பண்டாரநாயக ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சமூக சேவைகள் அமைச்சர் பி. ஹரிசன், அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் பெண்கள் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார ஆகியோரின் முன்னிலையில் இடம்பெறுகின்றது. இதனையொட்டி இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.
நுஸ்கி முக்தார் (BSW) 
இலங்கை சமூகப்பணிக் கல்லூரி

No comments: