குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் நிதி விசாரணைப் பிரிவுக்கு பெண் ஒருவர் அண்மையில் முறைப்பாடொன்றை மேற்கொண்டிருந்தார். அது அறிமுகமில்லாத நபர் ஒருவர் தன்னை வட்ஸப் குழுவொன்றில் இணைத்து, டிக்டொக் வீடியோக்களுக்கு லைக் மற்றும் கமெண்ட் போடுவதன் மூலம் பணம் ஈட்ட முடியும் எனத் தெரிவித்து, பின்னர் அதனை விட அதிக பணம் ஈட்டுவதற்கு முடியும் எனத் தெரிவித்து வங்கிக் கணக்கொன்றுக்கு பணம் வைப்பிலிட்ட சம்பவம் தொடர்பானதாகும். அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து தந்தையும் மகனொருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர்களும் குறித்த நிதி மோசடியில் சிக்கிக்கொண்டு பாதிக்கப்பட்டவர்கள் என்பது மேலதிக விசாரணைகளில் தெரியவந்தது. அதன்படி, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு 200 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் இலங்கையர்களும் வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். அத்துடன்,
இவர்கள் இந்த ஒன்லைன் நிதி மோசடிக்காக பயன்படுத்திய சுமார் 400 கணினிகள் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் இந்த ஒன்லைன் நிதி மோசடி தொடர்பில் 4 குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் குற்றவியல் விசாரணைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது அண்மையில் இடம்பெற்ற ஒரு சம்பவமாகும். இவ்வாறான பல சம்பவங்கள் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளன. காலத்துக்குக் காலம் பல்வேறு வடிவங்களில் வரும் இவ்வாறான மோசடிகள் ஊடாக ஒன்லைன் மோசடிக்காரர்களிடம் பெரும்பாலானவர்கள் தம்மை அறியாமலேயே சிக்கிக்கொள்கின்றனர். இதனால் பண இழப்பு மாத்திரமல்லாமல் பெருமளவானவர்கள் தமது சுய மரியாதையையும் தம்மை அறியாத நபர்களிடம் அடமானம் வைக்கின்றனர்.

பயனர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தொழில்நுட்ப உபகரணங்களில் உயர்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்வாங்கப்பட்டுள்ள நிலையிலும், அவற்றை பொடுபோக்காகவும் கவனத்தில் எடுக்காமலும் விடுவதனால் அதிகமான தரவு மீறல்கள் இடம்பெறுகின்றன. "95 வீதமான தரவு மீறல்கள் மனித தவறுகளால் இடம்பெறுகின்றன. மிகவும் பாதுகாப்பான அமைப்புக்கள் கூட சிறிய மற்றும் எளிய தவறுகளால் சமரசம் செய்யப்படலாம்.", என இலங்கை கணினி அவசரகால தயார் நிலை குழு (SLCERT) சுட்டிக்காட்டுகின்றது. ஸ்மார்ட் கையடக்கத் தலைப்பேசிகளை எடுத்துக்கொண்டால் அதில் பிரதானமாகக் காணப்படும் 'ஸ்க்ரீன் லொக்' பாதுகாப்பு நடவடிக்கையை ஒரு ஆரம்பகட்ட பாதுகாப்பு நடவடிக்கையாகக் குறிப்பிடலாம். ஆனால் இந்தப் பாதுகாப்பை கூட செயற்படுத்தாதவர்கள் பலர் உள்ளனர். 'ஸ்க்ரீன் லொக்' பாதுகாப்பு நடவடிக்கையை செயற்படுத்தாத உங்களது ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் ஊடாக வங்கிப் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதாக இருந்தால் அது மிகவும் எச்சரிக்கையான ஒரு நிலைமையாகும்.
மடிக்கணினி பயன்படுத்துவபர்கள் தம்மை அறியாமலே தமது மடிக்கணினிகளில் உள்ள கமராக்கள் இயங்குவது தொடர்பான சம்பவங்கள் பதிவாகியதை அடுத்து, தேவைப்படும் போது மாத்திரம் கமராவை இயக்குவதற்குத் தேவையான வசதிகள் உள்வாங்கப்பட்டுள்ளன. இது பயனர்களின் பாதுகாப்பின் மீது கொண்ட அக்கறையிலாகும்.
பிரசித்தி பெற்ற நிறுவனங்கள் அல்லது அரச நிறுவனங்கள் போல் ஆள்மாறாட்டம் செய்து இலவசமாகப் பரிசுப்பொருட்கள் வழங்குவதாகவும் சீட்டிழுப்பில் பங்குபற்றுமாறும் கூறி சமூக ஊடகங்கள் ஊடாக தனி நபர்களின் தனிப்பட்ட தரவுகளை ஒன்லைன் மோசடிக்காரர்கள் பெற்றுக்கொள்கின்றனர். "சந்தேகத்துக்குரிய நபர்களிடமிருந்து அல்லது நிறுவனங்களிடமிருந்து பரிசுப் பொதிகளை பெறுவதற்காக முகவரியை கேட்டு SMS அல்லது ஈமெயில் மூலம் அனுப்பப்படும் links களை அணுகுவதன் மூலம் உங்களுக்கு நிறைய இழப்புகள் ஏற்படக்கூடும்", என இலங்கை கணினி அவசரகால தயார் நிலை குழு விழிப்புணர்வு செய்கின்றது.
கடந்த பொசன் போயா தின காலத்தில் ஒரு நிறுவனமொன்றினால் வழங்கப்படும் இலவச 15 GB டேட்டா தன்ஸல் பெற்றுக்கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள link ஐ பயன்படுத்துமாறும் வட்ஸப் ஊடாக பகிரப்பட்டது. இவ்வாறு வட்ஸப் மற்றும் ஏனைய சமூக ஊடகங்கள் மூலம் பரவும் விடயங்களை ஆராய்ந்து பார்க்காமல் அவற்றை ஏனையவர்களுக்கும் அனுப்புவது பெரும்பாலானவர்களின் வழக்கமாகும். இவ்வாறு சர்வதேச நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவங்கள் போன்ற இன்னோரன்ன பிரபல நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி இந்த மோசடிகள் இடம்பெறுகின்றன. சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அல்லது சமூக ஊடகப் பங்கங்களைப் பரிசீலிப்பதன் மூலம் இவ்வாறு வரும் விடயங்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். அவை உண்மையானவைகயாக இருந்தால் அந்தந்த உத்தியோகபூர்வ தளங்களிலும் இந்த விளம்பரங்கள் பதிவிடப்பட்டிருக்கும் சந்தர்ப்பம் காணப்படுகின்றது. இதன்மூலம் அவற்றை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.
போலி வெப் தளங்கள், சமூக ஊடகங்கள், SMS, வட்ஸப் போன்றவை மூலம் அனுப்பப்படும் தகவல்கள் மூலம் இந்த ஒன்லைன் மோசடிக்காரர்கள் எம்மை அணுக முயற்சிக்கின்ற அதேவேளை, அவர்கள் அனுப்பும் இணைப்புகளை (links) க்ளிக் செய்து அவற்றுக்குப் பிரவேசிப்பதன் மூலம் அந்த நபர்களின் கணினி மற்றும் கையடக்கத் தொலைபேசியில் உள்ள தரவுகளை திருடி பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவது போன்று நிதி மோசடிகளுக்கும் இவற்றைப் பயன்படுத்துகின்றனர்.

தபால் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தைப் போன்ற போலி இணையப் பக்கம் ஒன்றின் ஊடாக உள்நுழைவு விபரங்கள் (Login Details), வங்கி அட்டை விபரங்கள் மற்றும் முகவரி போன்ற தனிப்பட்ட தரவுகளை பெற்றுக்கொண்டு இடம்பெற்ற மோசடி தொடர்பில் அண்மையில் பதிவாகியது. தபால் திணைக்களத்திலிருந்து அழைப்பது போன்று தொலைபேசி அழைப்பெடுத்து, பொதியொன்று வந்துள்ளதாகவும் அதனை விடுவிப்பதற்கு ஒரு தொகைப் பணத்தை வைப்பிலிட்டு பொதியைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கி மிகவும் சூட்சுமமான முறையில் இந்த மோசடி நடைபெறுகின்றது. சரியான புரிதல் மற்றும் விழிப்புணர்வு இன்மையால் இந்த மோசடியிலும் பலர் சிக்கொண்டனர். எனினும், மோசடிக்காரர்களுக்கு சட்டத்திலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாமல் போனாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்து அவ்வாறு இழக்கப்பட்ட பணத்தை மீட்பதற்கு நீண்ட நாட்கள் ஆகலாம். எனவே, இந்தப் பாதிப்புகள் வருமுன் காத்துக்கொள்வது சிறந்ததாகும்.
இவ்வாறான சிக்கல்களில் அல்லது ஒன்லைன் மோசடிகளில் நீங்கள் அகப்பட்டிருந்தால் இலங்கை கணினி அவசரகால தயார் நிலை குழுவின் (SLCERT) 101 அவசர தொலைபேசி இலக்கத்துக்கு முறைப்பாடு செய்ய முடியும். அத்துடன், இலவசமாக வழிகாட்டல்களையும் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பமும் காணப்படுகின்றது.
எனவே, இந்த யுகத்தில் தொழில்நுட்பத்தை கைவிட்டு, இணையத்தை புறந்தள்ளிவிட்டு வாழ முடியாது. எமது அன்றாட நடவடிக்கைகள் இணையத்துடன் கூடிய இந்தத் தொழில்நுட்பத்தினால் மிகவும் இலகுபடுத்தப்பட்டுள்ளது. கல்வி, தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் தொழில்நுட்பத்துடன் இணைந்துள்ளன. அது போன்றே இவற்றினாலான மோசடிகளும் அதிகரித்துள்ளன. அதற்காக எமது பிள்ளைகளை அவற்றிலிருந்து ஒதுக்கிவிட முடியாது. எனவே, இணையத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் மோசடிகள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பில் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டியது பயனர்களாகிய எமது பொறுப்பாகும்.
No comments:
Post a Comment