Trending Topic

We bring you Articles, Poems, Stories, Inspirational Quotes and Speeches

Saturday, May 11, 2019

சுகாதாரமற்ற உணவகங்கள் ; விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தவிக்கும் தூர பிரதேச பிரயாணிகள்!


அண்மையில் ஒரு பொலிஸ் அதிகாரியும் அவரது மனைவியும் மதவாச்சி நோக்கி பிரயாணத்தை மேற்கொண்டனர். மிரிஹானை பொலிஸ் பணிபுரியும் குறித்த பொலிஸ் அதிகாரி காணி பிரச்சினை ஒன்று தொடர்பிலேயே மதவாச்சி நோக்கி பயணம் மேற்கொண்டிருந்தார். பயணக் களைப்பு நீங்க இருவரும் மன்னார்  வீதியிலுள்ள உணவகமொன்றுக்குள் நுழைந்துள்ளனர். அங்கு சென்ற அவர்கள் உணவுக்காக மரக்கறி ரொட்டியை கோரியுள்ளனர். அவர்கள் உட்கொண்ட மரக்கறி ரொட்டியில் மணல் காணப்பட்டுள்ளது. இதனை அடுத்து குறித்த பொலிஸ் அதிகாரி உடனானடியாக பொது சுகாதார பரிசோதகருக்கு முறைப்பாடு செய்துள்ளார். இது பற்றி கோபமடைந்த உணவக உரிமையாளர் தனது கையாட்களுடன் இணைந்து பொலிஸ் அதிகரிக்கும் அவரது மனைவிக்கும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரியும் அவரது மனைவியும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட நாள்வரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

இது கடந்த மார்ச் மாதத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்தியொன்றின் சுருக்கமாகும். குறித்த பொலிஸ் அதிகாரி, பொது விடயங்கள் தொடர்பான தனது ஆர்வம் காரணமாக பொது சுகாதார பரிசோதகருக்கு முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளார். இதன் காரணமாக அவர் கடுமையாக தாக்குதலுக்கு இலக்காகி உள்ளார். இது இவ்வாறிருக்க, இலங்கையில் தூர பகுதிகளுக்கு பிரயாணம் மேற்கொள்ளும் பொது போக்குவரத்து பஸ் வண்டிகள் உணவுக்காக நிறுத்தும் உணவகங்கள் மிகவும் கீழ்த்தரமான நிலைமையிலேயே காணப்படுகின்றன. இது அரச மாற்றும் தனியார் என வேறுபாடின்றி காணப்படுகின்றது. இதனால் ஆன் - பெண், சிறுவர் - பெரியோர் என வேறுபாடின்றி அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். அங்கே இறங்கும் பயணிகள் எதோ பசிப்பதற்காக எதையாவது சாப்பிட்டுவிட்டு அமைதியாக செல்கின்றனர். குறித்த பொலிஸ் அதிகாரி முகங்கொடுத்தது போன்று சுகாதாரமற்ற உணவுகளை உட்கொண்ட பல பயணிகள் எதுவும் பேசாமல் மௌனமாக திரும்பி செல்கின்றனர். இதற்கு காரணம் தாமும் தாக்குதலுக்கு  உள்ளாகுவோம் என்ற பீதி தான். பல வருடங்களாக அனைத்து வகையான உணவக உரிமையாளர்களும் தமது நுகர்வோரை இவ்வாறு கீழ்த்தரமான நிலையிலே கவனிக்கின்றனர். 

சுகாதாரமற்ற உணவுகள்

இலங்கையில் பொதுவாக மாகாணங்களுக்கிடையிலான பஸ் போக்குவரத்தின் போதே அதிகமான தூரம் காணப்படுவதால் இடையில் தரித்து நின்று உணவருந்திவிட்டு செல்வதற்கான தேவை ஏற்படுகின்றது. இதன்போது குறித்த உணவகங்களில் வழங்கப்படும் உணவு வகைகள் எந்தவிதமான போஷாக்கினையும் கொண்டிராத உணவுகளாகவே உள்ளன. அதேபோன்று அவை சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகின்றன. இதனால் நுகர்வோர் கடும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர். இதனால் ஒரு சிலர் எந்த உணவும் உட்கொள்ளாமல் பசியுடனே பயணத்தை நிறைவு செய்கின்றனர். இவ்வாறு நுகர்வோரை பாதிக்கக்கூடிய உணவகங்கள் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் அதிக கரிசனை செலுத்தவேண்டும் என நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

உணவக மாபியா?

இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட சம்பவம், இந்த உணவகங்களில் வழங்கும் உணவுகளை சாப்பிட்டு விட்டு எதுவும் பேசாமல் செல்ல வேண்டும் என்பதையே உணர்த்துகின்றது. அவ்வாறு இல்லா விட்டால் தாக்குதலுக்கு இலக்காக நேரிடும் என்பதை மறைமுகமாக தெரிவிக்கின்றது. ஒரு பொலிஸ் அதிகாரிக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண ஒரு பொது மகன் எவ்வளவு அவலங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்பதை இதன்மூலம் தெளிவாக புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது. அவர்கள் வழங்கும் சுகாதாரமற்ற உணவுகளை உண்ண வேண்டும் என்பதற்கு அப்பால் எதாவது தவறாக பேசிவிட்டால் அவர்களின் தாக்குதலுக்கு இலக்காக வேண்டியுள்ளது. இவ்வாறான ஒரு உணவக மாபியாவே காணப்படுகின்றது. இதுபோன்ற அநாகரிகமாக நடந்துகொள்ளும் செயற்பாட்டை நிறுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நுகர்வோரை சுரண்டும் உணவகங்கள்

அனைத்து விதமான உணவகங்களிலும் சுகாதாரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவது போன்றே, அவற்றின் விலைகளும் சாதாரண விலைகளை விட அதிகமாகவே உள்ளன. இந்த உணவுகள் நுகர்வோரை நோய்க்கு இட்டுச்செல்வது போன்றே உணவகங்களின் உரிமையாளர்கள் அதிக விலையில் உணவுகளை விற்பனை செய்து நுகர்வோரை சுரண்டுகின்றனர். விசேடமாக துரித உணவுகளுக்கு எந்தவித விலைக்கட்டுப்பாடுகளும் காணப்படுவதில்லை. அது மாத்திரமல்லாமல் துரித உணவுகளின் நிறை தொடர்பிலும் எந்தவித ஒழுங்குவிதிகளும் பேணப்படுவதில்லை. இதனால் நுகர்வோர் அதிக விலை கொடுத்து போஷாக்கற்ற, சுகாதாரமற்ற உணவுகளை கொள்வனவு செய்ய வேண்டும் என்ற  நிர்பந்தத்துக்கு தள்ளப்படுகின்றனர். இது இவ்வாறிருக்க கோதுமை மாவின் விலை 5 அல்லது 6 ரூபாவால் அதிகரிக்குமானால், மிகவும் சிறிய உணவுகளின் விலைகளும் அதே அளவு விலையினால் அதிகரிக்கப்படுகின்றன. இது தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. எனினும் இவை தொடர்பில் கட்டுப்பாடுகளோ, கண்காணிப்புகளோ இடம்பெறுவதில்லை. இதனால் உணவாக உரிமையாளர்கள், அவர்கள் நினைத்த விலைகளில் உணவுகளை விற்பனை செய்கின்றனர்.

கொழும்பு மாநகர சபையின் முன்மாதிரி

கொழும்பு மாநகர சபை ஸ்தாபித்துள்ள அவசர சுற்றிவளைப்பு பிரிவு கடந்த புத்தாண்டு காலப்பகுதியில் நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்களை முற்றுகையிட்டு  காத்திரமான ஒரு நடவடிக்கையை மேற்கொண்டது. இவ்வாறு நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகளை விற்பனை செய்த நூற்றுக்கணக்கான உணவகங்களுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.  அதேபோன்று அவ்வாறான உணவகங்களிலிருந்து பெறப்பட்ட சுமார் 300 கிலோவுக்கும் அதிகமான காலாவதியான உணவு வகைகள் அழிக்கப்பட்டும் உள்ளன. இதேவேளை, கொழும்பு நகரில் உணவகங்கள் தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்ள 0112676161 எனும் அவசர அழைப்பு இலக்கம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. என்றோ எடுக்கப்படவேண்டிய இந்த நடவடிக்கை காலம் தாழ்த்தியாவது மேற்கொள்ளப்பட்டுள்ளது பாராட்டுக்குரியதே. கொழும்பு மாநகர சபை நடைமுறைப்படுத்தியுள்ள இந்த நடவடிக்கையை போன்று ஏனைய உள்ளூராட்சி மன்றங்களும் அவசர இலக்கங்களை அறிமுகப்படுத்துமானால் அது நுகர்வோருக்கும் பயணிகளுக்கு செய்யும் பாரிய நன்மையாக அமையும் என்பதில் அச்சமில்லை. 

ஆரோக்கியமான தேசத்தை நோக்கி

சுகாதாரமிக்க ஒரு தேசத்திலேயே, ஆரோக்கியமான ஒரு சமூகம் நிலைத்திருக்கும் என்ற அடிப்படையில் அரசாங்கம் மற்றும் பொதுமக்கள் இந்த விவகாரத்தில் கரிசனை காட்டுவது காலத்தின் தேவையாக உள்ளது. வீடுகளினூடாக மாத்திரமல்லாமல் உணவகங்களினூடாகவும் குறிப்பிடத்தக்க அளவு உணவு நாட்டின் பிரஜைகளை சென்றடைகின்றது. எனவே இவ்வாறான இடங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். இதன் மூலம் வீடுகளிலும் உணவகங்களிலும் ஆரோக்கியமான உணவுக் கலாச்சாரமொன்றை கட்டியெழுப்புவது தாமதப்படுத்தப்பட கூடாது. 

குளிர்பான வகைகளில் காணப்படும் சீனியின் அளவை குறிப்பிடும் வர்ண அளவை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டமை இந்த வரிசையில் குறிப்பிடத்தக்க ஒரு முன்னேற்றமாக காணப்படுகின்றது. அது போன்று துரித உணவுகளுக்கும் ஏதாவதொரு வகையான அளவை அறிமுகப்படுத்தப்பட்டு அவை கண்காணிப்படுவது அவசியமாகும்.

வெறும் சட்டங்களை கொண்டுவருவதன் மூலம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. அவற்றை நடைமுறைப்படுத்துவதில் பொதுமக்களும் காத்திரமான பங்களிப்பாளர்களாக மாற வேண்டும். இதன் மூலம் மாத்திரமே சட்டங்களினூடாக எதிர்பார்க்கப்படும் விடயங்கள் இடம்பெறும். எனவே உணவாக உரிமையாளர்களும் பொதுமக்கள் தொடர்பில் சிந்தித்து மக்களுக்கு போஷாக்கானதும் சுகாதாரமானதுமான உணவுகளை வழங்குவது அவர்களின் சமூக பொறுப்பாகும். 


அதுவே நாளைய ஆரோக்கியமிக்க, நோயற்ற தேசமொன்றை கட்டியெழுப்புவதற்கு காரணகர்த்தாவாக காணப்படும் !

- நுஸ்கி முக்தார் -



(ஐக்கிய அமெரிக்க உதவித்திட்டம் (USAID), சர்வதேச ஆராய்ச்சி மற்றும் பரிவர்த்தனை சபை (IREX) ஆகிய அமைப்புகளுடன் இணைந்து ஸ்ரீ லங்கா அபிவிருத்தி ஊடகவியலாளர் மன்றம் (SDJF) ஏற்பாடு செய்திருந்த முதலாவது MediaCorp நிகழ்ச்சித்திட்டத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை)

No comments: