தலைநகருக்கு
மாத்திரம் இரண்டாம் நிலையாக கருதப்படும் சொர்க்கபுரியான ஒரு நகரமாக தெஹிவளை - கல்கிஸ்ஸை
பிரதேசத்தை அழைப்பதில் எவ்வித பிழையும் இல்லை. கடற்கரை என்பது சுந்தரமான ஓர் இயற்கை
அமைப்பாகும். தெஹிவளை கல்கிஸ்ஸை கடற்கரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை
கவர்ந்த அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு சுற்றுலா வலயமாகும். வானுயர்ந்த கட்டிடங்கள், போக்குவரத்துக்கு காலி
வீதி மற்றும் புகையிரத பாதை என தெஹிவளை பிரதேசத்தில் வசிப்பவர்கள் அனைத்தையும் சுலபமாக
பெற்றுக்கொள்ளும் வகையிலேயே தெஹிவளை - கல்கிஸ்ஸை பிரதேசம் காணப்படுகின்றது.
இதனாலேயே,
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் குறுங்கால அடிப்படையில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும்
வெளிநாட்டவர்கள் தமது தற்காலிகமான தங்குமிடமாக தெஹிவளையை அமைத்துக்கொண்டுள்ளனர். குறிப்பாக
மாலைதீவிலிருந்து கல்வி மற்றும் தொழில் வாய்ப்பை நோக்கமாக கொண்டு இலங்கைக்கு வருபவர்கள்
பெரும்பாலும் தமது இருப்பிடங்களை தெஹிவளையிலேயே அமைத்துக்கொள்ள ஆசைப்படுகின்றனர்.
ஆனால்
வானுயர்ந்த கட்டிடங்களுக்கூடாக தெஹிவளையை சற்று உற்று நோக்கினால் தான் புரியும் அங்கு
காணப்படும் அவலங்கள் எத்தனை ஆயிரம் என்பது. யாருடைய அவதானத்துக்கும் உட்படாத ஒரு பகுதியினர்
தெஹிவளை பகுதியில் உள்ளார்கள் என்று கூறினால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். நாட்டின் சூழவுள்ள மிகப்பெரிய வளமான கடல் வளத்தை
தமது ஜீவனோபாயமாக கொண்டு நாட்டின் பொருளாதரத்துக்கு குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்பு
செய்து வரும் தெஹிவளை - கல்கிஸ்ஸை மீனவ சமூகத்தின் கண்டுகொள்ளப்படாத ஒரு பக்கமே இந்த
கட்டுரை வெளிக்கொணர்கின்றது.
கரையிலிருந்து
சுமார் 100 - 200 மீற்றர் தொலைவில் காணப்படும் நீண்ட கல் வரிசை காரணமாக தெஹிவளை - கல்கிஸ்ஸை மீனவ கிராமத்திலிருந்து கடலுக்கு
செல்லும் மீனவர்கள் தமது உயிருக்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய பாரிய அலைகளை கடந்தே
கடலுக்கு செல்லவேண்டுயுள்ளது. நீண்ட கல் வரிசையின் ஒரு பகுதியில் காணப்படும் இடைவெளியினூடாக (கடமத்த) மாத்திரமே படகுகளை செலுத்த வேண்டிய நிலையில்
உள்ளது. கொழும்பு, முகத்துவாரம் முதல் பாணந்துறை வரை கடலுக்கு பிரவேசிக்க உள்ள ஒரே
வலி இந்த கல் இடைவெளி என்பதால் மிகவும் தூரத்திலிருந்து வரும் மீனவர்களும் தெஹிவளை
- கல்கிஸ்ஸை பகுதியில் காணப்படும் இந்த இடைவெளியை நாடி வர வேண்டிய சூழ்நிலையில் காணப்படுகின்றனர்.
இதனால் அவர்களது படகுகளின் எரிபொருள்கள் வீணாக நிறைவுறுவதால், எரிபொருளுக்கே அதிக பணத்தை
செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அது
மாத்திரமல்லாமல் பருவ காலங்களிலே அதிக மீன் பிடி கிடைப்பதால், தமது கைகளை நிரப்பிக்கொள்ள
பருவ காலம் வரை மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கு இந்த மீனவ சமூகத்துக்கு காணப்படும்
பிரதான அச்சமாக பருவகால அலைகள் காணப்படுகின்றன. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்துடன் ஆரம்பமாகும்
பருவ காலத்தில், குறித்த கல் இடைவெளியினூடக எழும் பாரிய அலைகள் வன்முறையாக பரிணாமமெடுத்து
இவர்களின் வாழ்க்கையோடு முட்டி மோதுகின்றன. இந்த பாரிய அலைகள் இவர்களின் படகுகளை வீழ்த்தும்
அளவு சக்தி வாய்ந்ததாக உள்ளது. இதனால் பல்வேறு உயிர்களை பறிகொடுத்துள்ளதாக தெஹிவளை
- கல்கிஸ்ஸை மீனவ சமூகத்தினர் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறு
தனது கனவை இழந்த ஐந்து பிள்ளைகளின் தாய் கே.ஜீ.
ரேணுகா பீரிஸ் எம்மிடம் உரையாடும் போது;
![]() |
கே.ஜீ. ரேணுகா பீரிஸ் |
"எனது
கணவர் இறந்து தற்பொழுது 6 வருடங்கள் ஆகின்றன. எனக்கு 5 பிள்ளைகள் காணப்படுகின்றனர்.
ரொட்டி சுட்டு வியாபாரம் செய்து தான் நான் எனது வாழ்க்கையை கொண்டு செல்கிறேன். கல்
இடைவெளி மிகவும் அவதானமானது. எனது கணவர் இறக்கும் போது எந்த அறிவித்தாலும் வழங்கப்படவில்லை.
திடீரென வந்த அலை காரணமாவே அவர் இறந்தார். அதனை திருந்தி தரவுவதாக கூறுகின்றனர். எனினும்,
இன்னும் எந்த தீர்வும் வழங்கப்படவில்லை. நாளாந்தம் பலர் கடலுக்கு செல்கின்றனர். ஆனால்
கடல் அலை கனமாக அடிப்பதால் மேலும் பலர் கடலுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். அதனை
செய்து தருவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்." என எதிர்பார்ப்பு இழந்த நிலையில்
உணர்வு பூர்வமாக குறிப்பிட்டார்.
![]() |
பிள்ளைகளுடன் கே.ஜீ. ரேணுகா பீரிஸ் |
காலகாலமாக இவர்கள் இந்த மீனவ தொழிலை நம்பியே தமது வாழ்க்கையை ஓட்டிச்செல்கின்றனர். நாளாந்தம் 300 க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் பல்வேறு எதிர்பார்ப்புக்களுடனே கடலுக்கு செல்கின்றன. ஆனால் நீண்ட காலமாக இவர்கள் முகங்கொடுத்துவரும் இந்த பிரச்சினை காரணமாக, தமது எதிர்கால சந்ததியினருக்கு இந்த மீன்பிடி தொழிலை விட்டுச்செல்ல அந்த சமூகம் அச்சப்படுகின்றது.
"இந்த கல் இடைவெளியை சீர் செய்து தந்தால் மாத்திரமே
ஆயிரக்கணக்கான மீனவர்களின் உயிர்கள் பாதுகாக்கப்படும். இதனை சீர் செய்து தருமாறு மாத்திரமே
நாம் கோருகின்றோம். அப்போது தான் எமது மீனவர்கள் அனைவரும் சந்தோசத்துடன் வாழ முடியும்.
அவ்வாறு செய்து தந்தால் மாத்திரமே நாம் எமது பிள்ளைகளையும் மீனவ தொழிலுக்கு
பலக்குவோம்.
இந்த தொழிலே எமக்கு பரிச்சயம். இதனால் நன்றாக உழைக்க முடியும். இந்த கல் இடைவெளியை
சீர் செய்து தருவதாக அனைவரும் வாக்குறுதி வழங்குகின்றனர்.
நானும் மீன்பிடி அமைச்சுக்கு சென்றுள்ளேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனது வீடு சரியாக இந்த கல் இடைவெளிக்கு நேரே அமைந்துள்ளது. எமது பிள்ளைகளின் படகுகள்
வீழ்ந்து எமது கண் முன்னே அவர்களது உயிர்கள் பறிக்கப்படுவதை எவ்வாறு எம்மால் தாங்கிக்கொள்ள
முடியும். இதனால் தான் இதனை சீர் செய்து தருமாறு
நாம் கோருகின்றோம்." என தமது சந்ததியினரின் எதிர்காலம் குறித்த கரிசனையை சுமந்தவராக
தெஹிவளை - கல்கிஸ்ஸை மீனவ சங்க சிரேஷ்ட அங்கத்தவர் ஒருவரான எம். ஆனந்த எம்மிடம் தெரிவித்தார்.
![]() |
எம். ஆனந்த |
இவ்வாறு
பல்வேறு உயிர்களை பலிகொடுத்து அனாதைகளினதும் விதவைகளினதும் கண்ணீர் கதைகளை சுமந்து
காணப்படும் தெஹிவளை - கல்கிஸ்ஸை மீனவ கிராமத்தின் விவகாரம் தொடர்பில் அதிகாரத்துக்கு வரும் ஒவ்வொரு அரசும் வெறும் வாக்குறுதிகளுக்கு
மாத்திரமே மட்டுப்படு அவர்களை கண்டுகொள்ளாமல்
இருந்து வருவதாக மீனவ சமூகம் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதேவேளை,
கடலுக்கு சென்று மீண்டும் கரையொதுங்கும் போது கரையை அடையாளம் காண பயன்படும் வெளிச்ச
வீடு நீண்டகாலமாக செயலிழந்த நிலையில் காணப்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பருவ காலங்களில் உருவாகும் பரிய அலைகளை வெளிச்ச
வீட்டின் உதவியுடன் கண்டுகொள்ளும் மீனவர்கள், தற்பொழுது அந்த வெளிச்ச வீடு இல்லாததன்
காரணமாக பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.
![]() |
எம். ஷாந்த பெர்னாண்டோ |
இது தொடர்பில் துடுப்பு படகு மீனவர் ஒருவரான எம். ஷாந்த
பெர்னாண்டோ தெரிவிக்கையில்; "இந்த பிரச்சினை காரணமாக ஆறு மதங்களுக்கொருமுறை பருவகாலத்தில்
நான்கைந்து உயிர்கள் பறிபோகின்றன. மக்கள் பயத்திலே
தான் கடலுக்கு செல்கிறார்கள். அவர்கள் கரையொதுங்குவார்கள் என்று கரைக்கு மீண்டும் வரும்
வரை சொல்ல முடியாது. அனால் அவ்வாறு பாதிக்கப்படும்
நபர்களுக்கு எந்த நிவாரணங்களும் வழங்கப்படுவதில்லை", என குறிப்பிட்டார்.
வாழ்வா,
சாவா எனும் இரண்டுக்கும் மத்தியில் ஓடும் தெஹிவளை - கல்கிஸ்ஸை மீனவ கிராமம் இதுவரையும்
பல்வேறு உயிர்களை பலிகொடுத்துவிட்டன. பல்வேறு மீனவ உயிர்கள் கடலுக்கு பலிகொடுக்கப்பட்டும்
தீர்வு கிடைக்காத இந்த பிரச்சினையின் முன்னிலையில் மீனவ உயிர்கள் மாத்திரமல்லாமல் மீனவ
தொழிலும் அபாயத்தில் உள்ளமை தெளிவான விடயமே.
எனவே,
இனிமேலும் இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படவில்லை எனின் தாமதம் வருந்துவதற்கான காரணம்
என்பதை சுட்டிக்காட்ட வேண்டிய தேவை இல்லை.
- நுஸ்கி
முக்தார் -
காணொளி
(ஐக்கிய அமெரிக்க உதவித்திட்டம் (USAID), சர்வதேச ஆராய்ச்சி மற்றும் பரிவர்த்தனை சபை (IREX) ஆகிய அமைப்புகளுடன் இணைந்து ஸ்ரீ லங்கா அபிவிருத்தி ஊடகவியலாளர் மன்றம் (SDJF) ஏற்பாடு செய்திருந்த முதலாவது MediaCorp நிகழ்ச்சித்திட்டத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட காணொளியை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட கட்டுரை)
நன்றி: விடிவெள்ளி 2019.04.18
No comments:
Post a Comment