Trending Topic

We bring you Articles, Poems, Stories, Inspirational Quotes and Speeches

Sunday, February 17, 2019

ஒரு கல்விச் சூரியனின் அஸ்தமனம் – எம்.எஸ்.ஏ வாஹித் அதிபர்

ஹெம்மாதகமை பிரதேசத்தில் அறிவொளி பரப்பிய மேதை எம்.எஸ்.ஏ வாஹித் அதிபர் காலமானார் (15.02.2019). வாஹித் பிரின்ஸிபல் என்று எல்லோராலும் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் அழைக்கப்பட்ட மாமேதையின் மறைவு மாவனல்லை பிரதேசத்திற்கே பேரிழப்பாகும்.ஒரு கல்விச் சூரியனின் அஸ்த்தமனம் – எம்.எஸ்.ஏ வாஹித் அதிபர்
மர்ஹூம் முஹம்மது ஸாலி உம்மு குல்தூம் தம்பதியனருக்கு அரும் புதல்வராக 1925.12.18 ஆம் திகதி ஹெம்மாதகமை தும்புளுவாவை கிராமத்தில் அவதரித்தார்.

வாஹித் அதிபர் அவர்கள் தனது ஆரம்பக்கல்வியை ஹெம்மாதகம அல்அஸ்ஹர் கல்லூரியில் கற்றார். எட்டாம் வகுப்பு வரை அல்அஸ்ஹரில் கற்ற அவர் தரம் எட்டை எட்டியதும், அக்காலத்தில் பிரசித்தி பெற்ற களு/அலுத்கமை ஸாஹிரா கல்லூரியிலும் தொடர்ந்து மாத்தளை ஸாஹிராவிலும் தனது பாடசாலை கல்வியை கசடரக் கற்று தேர்ந்தார். அதனை தொடர்ந்து அலுத்கம ஆசிரியப்பயிற்சி கலாசாலையில் பயிற்ச்சிகளை தொடர்ந்தார். துடி துடிப்புமிக்க இளைஞனான அவர் கற்று கொடுப்பவராகவும் கற்றுக் கொள்பவராகவும் இருந்ததோடு தனது உயர் கல்வியை ஜயவர்தன பல்கலைகழகத்தில் ஆங்கில மொழி மூலம் தொடர்ந்தார். அங்கு ஆங்கில பட்டதாரியான அவர் 1978 ஆம் ஆண்டு கொழும்பு பல்கலை கழகத்தில் டிப்ளோமா கல்வியை முடித்தார்.



மாவனல்லை சாஹிரா கல்லூரியில் தனது ஆசிரியப்பணியை தொடர்ந்த சில காலங்களில் ஸாஹிராவின் அதிபராக கடமையேற்றார். சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டார். சமூகத்தின் எழுச்சி கல்வியிலேயே தங்கியுள்ளது என்பதில் ஆணித்தரமாக இருந்தார்.

மாவனல்லையில் மட்டுமன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கற்பிப்பவராகவும் அதிபராகவும் அரும் பணியாற்றினார்.
செல்லுமிடமெல்லாம் அவரது பாடசாலைகளின் கல்வி மற்று பௌதீக வழங்களை முனனேற்றுவதில் முன் நின்று உழைத்தார். கம்பளை ஸாஹிரா, மாவனல்லை ஸாஹிரா, ஹெம்மாதகம அல்அஸ்ஹர் கல்லூரி.ஆகியவற்றின் புகழ்பூத்த ஆங்கில ஆசிரியராக அரசியல் விஞ்ஞான ஆசிரியராக என பல்வேறு துறைகளையும் விருப்பத்தோடு கற்பித்தார்.
ஹெம்மாதகமை அல்அஸ்ஹர் கல்லூரியில் எழுபதுகளின் ஆரம்பத்தில் அதிபராக பதவியேற்று கல்லூரியின் கல்விதுறை குறிப்பாக ஆங்கில மொழி, மற்றும் உயர்தர வகுப்புகள், விஞ்ஞான ஆய்வுகூடம் என்று வளர்ச்சியின் பால் இட்டு சென்றார். மாணவர்களினதும் ஆசிரியர்களினது பெற்றோரினதும் ஒருசேர ஆதரவை பெற்ற வாஹித் அதிபர் அவர்கள் கடமையிலும், கட்டுப்பாட்டிலும், ஒழுக்க விழுமியங்களிலும் கண்டிப்பானவராக காணப்பட்டார்.
இன்று பெரும் பெரும் அரச துறைகளிலும் தனியார் துறைகளிலும், வைத்தியர்கள் பொறியியளாலர்கள் சட்டத்தரணிகள் என வியாபித்துள்ள இவரது மாணவர்கள் எண்ணிலடங்காதவர்கள். அல் அஸ்ஹர் கல்லூரியின் கலை இலக்கியதுறையை ஆரம்பித்தவராக இவரைக் கருதலாம். அல் அஸ்ஹர் வரலாற்றில் முதல் இலக்கிய இதழாக தேன் துளி எனும் இதழ் இவரது காலத்திலே ஆரம்பித்து வைக்கப்பட்டது. விளையாட்டுத்துறை இவரது காலத்திலே ஊக்குவிக்கப்பட்டது. சகல துறைகளினதும் ஆரம்பகர்த்தாவாக இவரே இருந்துள்ளார்.

எப்போதும் கம்பீரமாக கட்சியளிப்பார். நேரிடையாகவே சொல்ல வேண்டியதை சொல்லும் ஆளுமை மிக்கவராக மிளிர்ந்தார். கொடேகொட கிராமத்தின் பரிபாலன சபையில் பத்து வருடங்களுக்கு மேலக தலைத்துவ பதவியேற்று பாரம்பரிய நிர்வாக கட்டமைப்பை மாற்றியமைத்தார்.
இன்றைய மாவனல்லை நவீன ஸஹிராவின் தந்தையாக இவர் போற்றப்படுகிறார். யுகத்திற்கு ஏற்றவாறு நிர்வாக கட்டமைப்புகளையும் கற்பித்தல் முறைகளையும் மாற்றியமைத்தார். ஸாஹிராவின் மைதானம் மற்றும் கல்வி பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்தார். கல்வியே மூச்சாக வாழ்ந்த வாஹித் அதிபர் அவர்கள் 1986, 87 களில் தனது ஓய்வின் பின்னர் பல தனியார் கல்வி நிலையங்களை உறுவாக்கினார். ஆங்கில மொழியை பரப்புவதில் அரும் பாடு பட்டார். உயர்தர வகுப்புகளுக்கான கல்விக்கூடம் ஒன்றை ஆரம்பித்து கலைத்துறை மாணவர்களை உள்வாங்கி உயர்தர வகுப்புகளின் மூலம் பலகலைகழகம் வரை அனுப்பி வைத்தார்.
அவரின் பிற்காலத்தில் மாவனல்லை பிரதேச காதி நீதவானாக சேவையாற்றினார். தனது பிள்ளை செல்வங்களையும் கற்றபித்து இன்று சிறந்த நிலையில் விளங்குகின்றனர். இவை அவரின் கல்விப்பணியின் சிறு துளி என்பதை பதிவு செய்து கொள்கிறேன். அவரின் வரலாறு பெரும் நூலக வெளிவரக்கூடிய அளவு சேவைகள் நிரம்பியது. 
தனது இறுதி மூச்சு வரை சமூகத்தின் கல்வி வளர்ச்சிபற்றியே சிந்தித்து கொண்டிருந்தவர். தனது 93 ஆம் வயதில் இறைவன் அவரை தன்னுடன் அழைத்துக் கொண்டான். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜஊன். அவருக்கு மேலான ஜன்னதுல் பிர்தௌஸை பிரார்த்தித்தவனாய்..!
- நியாஸ் ஸாலி -

No comments: