Trending Topic

We bring you Articles, Poems, Stories, Inspirational Quotes and Speeches

Friday, January 19, 2018

மறைந்தும் மறவாத மர்ஹும் செய்யித் மீராஸ் அதிபர் அவர்கள்

ஹந்தஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலையின் 125 வருட கால வரலாற்றில் 24 வது  அதிபராக சேவை செய்து ஓய்வு பெற்ற அதிபர்  அல்ஹாஜ் ஸெய்யித் மீராஸ் (இலங்கை அதிபர் சேவை 1)அவர்கள் 2017.10.31 ஆம் திகதியன்று (செவ்வாய்க்கிழமை) இறையடி சேர்ந்தார். (இன்னாலில்லாஹ்.....)



வாழ்க்கைச் சுருக்கம்
மறைந்த மர்ஹும் செய்யித் மீராஸ் அவர்கள் ஊவா மாகாணத்தில் வெளிமட பிரதேசத்தில் போகஹகும்புர எனும் கிராமத்தில் மீராபிள்ளை, ஸைதூன் பீபீ ஆகியோருக்கு 1955.12.05ம் திகதி குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்தார். அவருக்கு 7 சகோதரர்களும் 2 சகோதரிகளும் உடன் பிறப்புகளாகக் காணப்படுவதோடு இரு ஆண் பிள்ளைகளுக்கு தந்தையாகவும் காணப்படுகிறார்.



பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தனது ஆரம்பக் கல்வியை மாதிபொல அரபா முஸ்லிம் வித்தியாலயத்தில் கற்று க.பொ.த.சா/த. மற்றும் உ/த. வகுப்புகளை வெளிமட மு.ம.வி.கற்று பின்னர் 1977ல் பண்டாரவல சேர்.ராஸிக் பரீத் ம.ம.வி. ஆசிரியர் சேவையில் இணைந்து தனது ஆசிரிய பணியை ஆரம்பித்தார். பின்னர் அங்கிருந்து அலுகொல்ல மு.வி. க்கு இடமாற்றம் பெற்று அங்கிருந்து அதிபர் சேவை பரீட்சையை எழுதி தனது தொழிற் தகைமையை வளர்த்துக் கொண்டார். பின்னர் தனது சொந்த கிராமத்தில் போகஹகும்புர மு.வி.ல் அதிபராகப் பணியாற்றும் சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொண்டார்.

தனது வாழ்க்கைப் பயணத்தில் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த உடுநுவர தேர்தல் தொகுதியில் படுபிடிய கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியை சம்சுன் நிஹாராவைத் திருமணம் செய்து தனது குடும்ப வாழ்வை ஆரம்பித்தார்.

ஹந்தஸ்ஸ அல்மனாரில் பிரதி அதிபராக, பின்னர் அதிபராக நியமனம்
காலத்தின் தேவைக்கேற்ப 1997 ஆம் ஆண்டு ஹந்தஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலைக்கு பிரதி அதிபராக இடமாற்றம் பெற்றுக் கொண்டதைத் தொடர்ந்து அன்றிலிருந்து தனது இருப்பிடத்தையும் படுபிடியை மையமாகக் கொண்டு அமைத்துக் கொண்டார்.

பின்னர் 2008ம் ஆண்டு அல்மனாரில் அப்போதைய அதிபராக இருந்த அல்ஹாஜ் பீ.எம்.ஜெமீல் அவர்கள் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட அதிபர் வெற்றிடத்துக்காக பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் நலன் விரும்பிகளின் ஆதரவுடனும் கல்வியமைச்சின் அனுமதியுடனும் பாடசாலையின் வரலாற்றில் 24வது அதிபராகப் பதவியேற்றார். அன்று தொடக்கம் 2015.12.5ம் திகதி ஓய்வு பெறும்வரை அதிபராக சேவை செய்தார். பின்னர் 2016ல் தனது பாரியாருடன் புனித ஹஜ் கடமையையும் நிறைவேற்றி பின்னர் 2017.10.31ம் திகதி (செவ்வாய்க்கிழமை) தனது 62வது வயதில் அல்லாஹ்வின் நாட்டப்படி இறையடி சேர்ந்தர்.


சேவைகளும் பணிகளும்
மர்ஹும் மீராஸ் அவர்கள் தனது ஆசிரிய காலத்தில் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளின் அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பு செய்த ஓர் ஆசிரியராக விளங்குகிறார். அவரிடம் கற்ற பல மாணவர்கள் ஒன்று சேர்ந்து மிக நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு 2014ல் அவரது சேவை நலனுக்காக அன்னாரது சொந்த கிராமத்திலேயே மாபெரும் பாராட்டு விழா ஒன்றை ஏற்பாடு செய்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பின்னர் அதிபராக பதவி உயர்வு பெற்று போகஹகும்புர மு.வி.ன் பௌதீகவள மற்றும் பரீட்சை அடைவு மட்டங்களின் அபிவிருத்திக்கு காரணமாக அமைந்து குறித்த பாடசாலையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். அவரது ஜனாஸாவில் போகஹகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த பெருந்திரலான பெற்றார் மற்றும் அவரிடம் படித்த பல மாணவர்கள் அன்னாரை மறவாமல் கலந்து கொண்டமை அவரது சேவைக்கு சிறந்த சாட்சியாகும்.

பின்னர் அல்மனாரில் பிரதி அதிபராக சேவை செய்த காலத்தில் பாடசாலையின் அதிபருக்கு முகாமைத்துவத்திலும் நிர்வாகத்திலும் பக்கபலமாக இருந்து தன்னால் முடியுமான பங்களிப்புகளைச் செய்திருக்கிறார். பாடசாலையின் நிர்வாகக் கட்டமைப்பில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி அதனை ஓர் ஒழுங்கு முறைக்கு கொண்டுவருவதில் வெற்றி கண்டார். கல்வி அமைச்சுக்கும் கல்வித் திணைக்களத்துக்கும் அடிக்கடி சென்று அதிகாரிகளுடன் நல்ல முறையில் அணுகி அல்மனாரின் நற்பெயரை பதிய வைப்பதில் வெற்றி கண்டார்.

பின்னர் அதிபராகப் பதவியேற்றதும் பாடசாலையின் முகாமைத்துவக் குழு, அபிவிருத்திக் குழு, ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்கம், நலன் விரும்பிகள் மற்றும் அரசியல் வாதிகளின் ஆதரவுடன் பல்வேறு அபிலிருத்திப் பணிகளை முன்னெடுப்பதில் அயராது உழைத்தமை குறிப்பிடத்தக்கது.விளையாட்டுப் போட்டிகள், பரிசளிப்பு விழாக்கள், கல்விச் சுற்றுலாக்கள், கண்காட்சிகள் போன்றவற்றை ஏற்பாடு செய்து மாணவர்களின் பல்வேறு திறமைகளை வெளிக் கொண்டுவருவதில் வெற்றி கண்டார். மேலும் மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தை முன்னேற்றுவதற்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி பரீட்சை பெறுபேறுகளை அதிகரித்து மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கும் கல்விக் கல்லூரிகளுக்கும் பிரவேசிப்பதற்கு களம் அமைத்துக் கொடுத்தார்.

அல்மனார்  அன்னாரது காலத்திலேயே 1000 இடைநிலைப் பாடசாலைத் திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டு ஆரம்பப் பிரிவு அந்நூர் ஆரம்பப் பாடசாலை என தனியான ஓர் அலகாக வேறாக்கப்பட்டது. உயர் கற்கை நெறியில் தொழில்நுட்ப பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. தற்போது அல்மனாருக்கு புதுப் பொழிவை காட்டுகின்ற மூன்று மாடிகளைக் கொண்ட தொழில்நுட்ப பீடமும் இரு மாடிகளைக் கொண்ட தொழில் நுட்ப ஆய்வுகூடமும் புதிய அலுவலக கட்டிடமும் நிர்மாணிக்கப்படுவதற்கு அன்னாரது பங்களிப்பும் பெருமளவில் உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது. நலன் விரும்பிகள் மற்றும் அரசியல் வாதிகளை அணுகி கல்வியமைச்சுக்கும் கல்வித் திணைக்களத்துக்கும் அடிக்கடி சென்று அதிகாரிகளை சந்தித்து இரவு பகலாக பல்வேறு வகையான நிர்வாக வேலைகளைச் செய்து கூட்டங்களை ஏற்பாடு செய்து குறித்த கட்டிடத் தொகுதிகளை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தமை குறிப்பிடத்தக்கது.

ஓய்வு பெறுவதற்கு முன் அரசினால் வழங்கப்படுகின்ற முழுமையான சம்பளத்துடன் கூடிய 3 மாத கால ஓய்வு முன்னிலை விடுமுறையைக் கூட எடுக்காமல் தனது பணியை செய்த ஒரு அதிபராக அவர் காணப்படுகிறார்.
தனது பதவிக் காலத்தில் வீட்டில் இருந்ததை விட பாடசாலையில் கழித்த நாட்களே அதிகம்.

பண்புகள்
மர்ஹும் மீராஸ் அவர்கள் இளகிய மனம் படைத்தவர். எல்லோருடனும் நல்லமுறையில் பழகக்கூயவர். ஆடம்பரமின்றி ஆரவாரமின்றி இறுதி வரை எளிமையாக தனது வாழ்வை அமைத்துக் கொண்டு அனைவரது உள்ளங்களிலும் நீங்காத இடம்பிடித்துக் கொண்டவர்தான் மறைந்தும் மறவாத மர்ஹும் ஸெய்யித் மீராஸ் அதிபர் அவர்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரது நற்கருமங்களைப் பொருந்திக் கொள்வானாக. பாவங்களை மன்னித்து சுவன வாழ்வை வழங்குவானாக.


எம்.ஜே.எம்.ஹிஜாஸ் (நழீமி)
அதிபர்
அல்மனார் தேசிய பாடசாலை
ஹந்தஸ்ஸ

No comments: