Trending Topic

We bring you Articles, Poems, Stories, Inspirational Quotes and Speeches

Monday, December 18, 2017

பிற மதத்தினரையும் கவரும் முப்தி மென்கின் உரைகள் | Mufti Menk Sri Lanka Visit - 2017


பிரபல சர்வதேச இஸ்லாமிய போதகரும், உளவளத்துணையாளருமான முஃப்தி இஸ்மாயில் மென்க் கடந்த வாரம் இலங்கைக்கும் விஜயம் செய்திருந்தார். கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் முஃப்தி மென்க் இலங்கையில் வந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றி வருகின்றார். இம்முறை யூனிட்டி டுவர் (Unity Tour) எனும் தொனிப்பொருளில் அவரது விஜயம் அமைந்திருந்தது.


முஃப்தி மென்க் பற்றி…
முஃப்தி இஸ்மாயில் மென்க் சிம்பாபே நாட்டில் பிறந்து வளர்ந்த ஒரு இஸ்லாமிய அறிஞர். மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் ஷரீஆ துறையில் பட்டப்படிப்பை நிறைவேற்றியுள்ள இவர் அல்டர்ஸ்கேட் பல்கலைக்கழகத்தில் சமூக வழிகாட்டல் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றுள்ளார்.


உலகம் முழுவதும் அங்கீகாரம் பெற்றுள்ள இவர் உலகில் அதிக செல்வாக்குள்ள 500 முஸ்லிம்களில் ஒருவராக கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் பெயர்குறிப்பிடப்பட்டுள்ளார். சமாதானம், நீதி என்பவற்றை வலுவாக எடுத்துரைக்கும் முஃப்தி மென்க் அனைத்து விதமான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்துவருகின்றார்.

புத்தக வெளியீடு
இம்முறை முஃப்தியின் இலங்கை விஜயத்தின் பிரதான நிகழ்வாக அவரால் எழுதப்பட்ட “Motivational Moments” (ஊக்குவிக்கும் தருணங்கள்) எனும் புத்தகம் முதன்முறையாக இலங்கையில் வெளியிடப்பட்டது. பேஸ் புக், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களின் ஊடாக உலகம் பூராகவும் மில்லியன் கணக்கான மக்கள் அவரை பின்தொடர்கின்றனர். இந்த சமூக ஊடகங்கள் வாயிலாக நாளாந்தம் மில்லியன் கணக்கானோரின் உள்ளங்களை தொடும் நற்சிந்தனைகளை முஃப்தி மென்க் பதிவிட்டு வருகின்றார். அவரின் இந்த சிந்தனைகளை புத்தகமாக வெளியிடுமாறு பல்வேறு அழைப்புகள் அவருக்கு மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த சிந்தனைகளில் மிகவும் பிரபலமான, சமூக ஊடகங்களில் அதிகமானோரால் பகிரப்பட்ட 500 சிந்தனைகள் அடங்கிய தொகுப்பே “Motivational Moments” (ஊக்குவிக்கும் தருணங்கள்) எனும் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. பொறுமை, அன்பு, தவறுக்கு வருந்துதல் போன்ற தலைப்புகளில் அவரது சிந்தனைகள் இந்த புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் முதன்முறையாக வெளியிடப்பட்ட இந்த புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்வை நொலேஜ் பொக்ஸ் (Knowldge Box) ஊடக வலையமைப்பு மிகவும் விமர்சையாக ஏற்பாடு செய்திருந்தது. கடந்த 07ம் திகதி வியாழக்கிழமை கொழும்பு 06 மரைன் கிராண்ட் (Marine Grand) மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புத்தக ஆய்வினை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முன்னாள் தலைவரும் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பளர் நாயகமுமான சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன நிகழ்த்தினார்.


மனித உரிமைகள், நல்லிணக்கம், ஜனநாயகம் என்பவற்றை ஊக்குவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடும் ஆர்வலர் ஒருவரான சுதர்ஷன குணவர்தன புத்தக ஆய்வினை மேற்கொண்டமை சிறப்பம்சமாகும். புத்தக வெளியீட்டு நிகழ்வுக்கு இன, மத பேதமின்றி அனைத்து சமூகங்களை சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள், உலமாக்கள், துறைசார் நிபுணர்கள், வர்த்தகர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


அனைவரும் ஒற்றுமையாக வாழத்தேவையான சகிப்புத்தன்மையை எவ்வாறு பேணுவது என்பது தொடர்பில் இந்த புத்தகத்தின் ஊடக முஃப்தி மென்க் வலியுறுத்துவதாக புத்தக ஆய்வினை மேற்கொண்ட சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன சுட்டிக்காட்டியிருந்தார்.

நூல் வெளியீட்டு விழாவில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான முஸ்லிமல்லாதோரை அழைத்து 3,500 பெருமதியான புத்தகங்களை இலவசமாக வழங்குவதற்கு நொலேஜ் பொக்ஸ் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் பொது பல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. திலந்தவின் வருகை சமூக ஊடகங்களில் பெரும் பேசுபொருளாக மாறியிருந்தது.

பொது உரைகள்
ஐந்து நாட்கள் இலங்கைக்கான விஜயம் மேற்கொண்டிருந்த முஃப்தி மென்க் கடந்த வெள்ளிக்கிழமை கொள்ளுபிட்டிய ஜும்மா பள்ளிவாசலில் ஜும்மாப் பிரசங்கத்தை நிகழ்த்தினார். நம்பிக்கையை வளர்த்து பன்முகத்தன்மையை பேணுதல் எனும் தலைப்பில், வெறுப்பு பேச்சுக்களை தவிர்ந்துகொண்டு அன்பை பரப்புவது தொடர்பில் அவரது பிரசங்கம் அமைந்திருந்தது. அவரது உரையை செவிமடுக்க பள்ளிவாசல் நிரம்ப மக்கள் வருகை தந்திருந்தனர். இதனால் பள்ளிவாசலுக்கு வெளியே பாதையிலும் மக்கள் தொழுகையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.


இதனை அடுத்து, வெள்ளி மற்றும் சனி ஆகிய தினங்களில் இரவு ஜவாத்தை ஜும்மா பள்ளிவாசலில் அவரது இரு உரைகள் இடம்பெற்றன. இதில் கலந்துகொள்ளக்கூடிய வாய்ப்பை பெண்களுக்கும் வழங்கும் வகையில் பள்ளிவாசலின் மேல்மாடியில் பிரத்தியேகமாக பெண்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவரை பின்தொடரும் ஆண்கள், பெண்கள் என இருபாலாரும் இந்த உரைகளை செவிமடுக்க வந்திருந்தனர். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் இடைப்பட்ட வயதினர் முஃப்தி மென்கின் போதனைகளை கேட்க ஆர்வம் காட்டுகின்றனர்.

இதேவேளை, முஃப்தி மென்கின் இளைஞர் வழிகாட்டல் நிகழ்ச்சியொன்று தெஹிவளை ஜும்மாப் பள்ளி வாயலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. “நேர்மறையான மாற்றம்’ எனும் தொனிப்பொருளில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அதிகமான இளைஞர்கர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

மனிதர்கள் என்ற வகையில் உலகில் வாழும் அனைத்து மக்களும் சகோதர சகோதரிகள் என்ற எண்ணக்கருவை வளர்க்கும் வகையிலும், முஸ்லிம் அல்லாதவர்களுடன் நட்புறவை பேணுதல், சகவாழ்வு, நல்லிணக்கம், ஏனையோரை மதித்தல் போன்ற இஸ்லாமிய கோட்பாடுகளை போதிக்கும் வகையிலும் முஃப்தி மென்கின் உரைகள் அமைந்திருந்தன. இலங்கை போன்ற பல்லின சமூகத்தினர் மத்தியில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்களுக்கு அவரது உரைகள் வழிகாட்டக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடிய தெளிவான ஆங்கிலத்தில் பேசுவது அவரது உரைகளுக்கு இலங்கையில் செல்வாக்குப் பெறுவதற்கு முக்கிய காரணமாகும். பல முறை இலங்கை வந்துள்ள முப்ஃதி மென்கின் இலங்கை விஜயம் குறித்து அரச உளவுப் பிரிவினர் கண்காணிப்புடனேயே இருந்தனர். முப்ஃதி மென்க் அனேகர் வருவது போன்று விசிட் விசாவில் வந்திருந்ததால் அவருக்கு இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாமலிருந்திருக்கலாம். ஏற்பாட்டாளர்கள் மாநாட்டு விசாவிலேயே அவரை அழைத்திருந்தனர்.

விரிவுரைக்கு அழைப்பவர்களுக்கு இதுவொரு பாடமாக அமைந்துள்ளது. விசிட் விசாவில் வரும் ஒருவருக்கு பொதுக் கூட்டங்களில் உரையாற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.





No comments: