Trending Topic

We bring you Articles, Poems, Stories, Inspirational Quotes and Speeches

Friday, December 14, 2018

ஊடக நிறுவனங்கள் அரசியல் மற்றும் வர்த்தக சிந்தனைகளால் கைப்பற்றப்படுவதன் ஆபத்தான விளைவு

ஒக்டோபர் 26ம் திகதி எதிர்பாராத விதமாக இடம்பெற்ற அரசியல் மாற்றத்தை அடுத்து கடந்த சில வாரங்களாக இந்த நாட்டின் அனைத்து அரச ஊடகங்களும், தனியாருக்கு சொந்தமான ஊடகங்களில் பெரும்பாலானவை மிகவும் பக்கசார்பாக தமது அறிக்கையிடல்களை மேற்கொள்வதை நாம் நல்லமுறையில் கண்டோம்.

“தேர்தல் காலம் போன்று அல்லது அதற்கும் மேலாக அரசியல் ரீதியாக தீர்மானம் மிக்க இந்தக் காலத்தில் நாட்டில் அதிகமானோரின் தகவல் மூலமாக காணப்படும் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடகங்களின் பொறுப்புமிக்க செயற்பாடு இல்லாமை பாரதூரமானது.”


“இந்த நாட்டின் ஜனநாயகத்தின் காவல் நாயாக செயற்படுவதற்கு பதிலாக தமது நண்பர்கள் / உரிமையாளர்களான அரசியல்வாதிகளின் கைபொம்மைகளாக இருந்து கோழைத்தனமான, அசிங்கமான ஊடகவியலில் ஈடுபடுவது தனியார் மற்றும் அரச ஊடகங்கள் இரண்டிலும் காணக்கூடியதாக உள்ளது.”

இவ்வாறு நடப்பது ஏன்? உரிமையாளர்களின் குறுகிய அரசியல் நோக்கங்கள், பொதுமக்களின் நன்மைகளுக்கு அப்பாற்பட்டு வெளிப்படுவதே என சுருக்கமாக விளக்கலாம்.

இது புதிய விடயமொன்றல்ல. எனினும் ஒன்றுகொன்று மிகவும் மாறுபட்ட, பல்வேறுபட்ட அரசியல் பின்னணி கொண்ட உரிமையாளர்களின் கீழ் இயங்கும் இந்நாட்டின் தனியார் ஊடகங்கள் ஒரேயடியாக ஒன்று சேர்ந்தது எவ்வாறு?

தற்போதைய நிலைமையில் ஊடக நிறுவனங்களுக்கு மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் குறைவு. அவ்வாறான அழுத்தங்கள் இல்லாத போதும் பெரும்பாலான ஊடகங்கள் நித்திரையில் நடமாடுவது போன்று செயற்படுவது ஏன்?

அண்மைய ஆண்டுகளாக ஊடக ஆய்வாளர்கள் மூலம் உலகளாவிய ரீதியில் இனங்காணப்பட்டுள்ள ஒரு போக்காக, அரசியல் அல்லது வர்த்தக குழுக்கள் சூட்சுமமான முறையில் ஊடக நிறுவனங்களை தமது பிடிக்குள் வைத்துகொள்வதை கூறலாம்.

ஆங்கிலத்தில் இது ‘Media Capture’ என அழைக்கப்படுகின்றது. நாம் இதனை ‘ஊடக கைப்பற்றல்’ என கூறுவோம்.

இவ்வாறு கைப்பற்றப்படும் ஊடக நிறுவனங்களுக்கு நடப்பு நிகழ்வுகளை பக்கச்சார்பின்றி பரளாக அறிக்கையிடுவதற்கு முடியாமல் போகின்றது. அவற்றில் பணிபுரியும் ஊடகவியலாளர்களுக்கு பொதுநலனுக்கு பதிலாக சில அரசியல் அல்லது வர்த்தக நோக்கங்களுக்காக தமது ஊடகவியலை மேற்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது.

‘Capture’ எனும் சொல் முதலில் பயன்பாட்டுக்கு வந்தது பொருளியளிலாகும். ஏதாவதொரு துறையை ஒழுங்குபடுத்தும் பொறுப்பை ஏற்றுள்ள கட்டுப்பாட்டாளர்கள், தாம் சுயாதீனமாக ஒழுங்குபடுத்த வேண்டிய நிறுவங்களுக்கு தேவைக்கதிகமாக நெருங்கி, தமது பொறுப்பை புறக்கணிப்பு செய்வதை ‘கட்டுப்பாட்டாளர் கைப்பற்றல்’ (Regulatory Capture) என அழைக்கப்படுகின்றது.

ஊடகத்துறையுடன் தொடர்புபட்ட கைப்பற்றல் தொடர்பில் 2005இல் எழுதப்பட்ட ஆய்வு அறிக்கையொன்றிலேயே முதலாவதாக பேசப்பட்டது. லண்டன் பொருளியல் பல்கலைக்கழகத்தின் திமதி பெஸ்லி மற்றும் கொலொம்பிய வர்த்தக பல்கலைக்கழத்தின் அண்றியா புரூட் ஆகியோரே இந்த ஆய்வறிக்கையின் இணை ஆசிரியர்களாவர்.

உத்தியோகபூர்வ செய்தி தணிக்கை காணப்பட்டு பின்னர் அதனை இல்லாமல் செய்த நாடுகளில் பல வருடங்கள் கடந்தும் அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு பயந்து பக்கச்சார்பை காட்டும் தனியார் ஊடகங்கள் காணப்படுவதற்கான காரணங்களை அவர்கள் ஆய்வு செய்தனர். சோவியட் ஒன்றியத்தில் கடும் ஊடக கட்டுப்பாடு 1990 இன் பின்னர் இல்லாமல்போனாலும் ரஷ்யாவில் பெரும்பாலான ஊடகங்கள் ஒரு சில அரசியல் மற்றும் வர்த்தக அதிகாரம் படைத்தவர்களின் கைக்குள் இருந்தமை ‘ஊடக கைப்பற்றல்’ என அவர்கள் வாதிட்டுள்ளனர்.

ஜேர்மன் பெர்லின் நகரில் Freie Universität பல்கலைக்கழகத்தில் கலாநிதி கற்றை ஆய்வாளர் கிறிஸ்டியன் சைமன் (Kristian Simon) தெரிவிப்பதாவது, ஊடக நிறுவனங்களை தணிக்கை செய்வது, கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாத பிரதம ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பது அல்லது தாக்குதல் மேற்கொள்வதுதற்கு பதிலாக மிகவும் தந்திரமான முறையில் ஊடகங்களை கைப்பற்றிகொள்ளல் ரஷ்யாவில் மற்றும் பெரும்பாலான கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் காணப்படுகின்றது.

“ஊடகவியலாளர்களை தாக்கும் போது அல்லது கொன்றுபோடும் போது அவற்றுக்கு எதிராக பாரிய அளவில் உள்நாட்டு வெளிநாட்டு எதிர்ப்புகள் வருவதாக அரசியல் மற்றும் வர்த்தக தலைவர்கள் அறிந்துவைத்துள்ளனர். இதனால் மறைமுகமாக தனியார் ஊடக நிறுவனங்களை தம்வசப்படுத்திகொள்ளவது தற்பொழுது அவர்களுடைய உத்தியாக உள்ளது,” என அவர் குறிப்பிடுகின்றார்.

ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள் அதனை தமது தனிப்பட்ட அரசியல் அல்லது இனவாத அல்லது தேசியவாத சிந்தனைகளை வளர்ப்பதற்கு பயன்படுத்திகொள்வது புதிய விடயமல்ல. வர்த்தக ரீதியான தொழில் ஒன்றாக ஊடகம் உலகில் எழுந்து வந்தது இதற்கு 200 வருடங்களுக்கு முன்னராகும்.

அந்த பின்னணியிலும் உரிமையாளர்களின் பக்கம் மற்றும் பொதுநலம் போன்ற இரண்டையும் ஓரளவிற்கு சமநிலையாக பேணுவதற்கு மேற்கு லிபரல் சமூகங்களின் ஆசிரியர்கள் போன்று லேக் ஹவுஸ் ஸ்தாபகர் டி.ஆர். விஜேவர்தனவின் கீழ் பணியாற்றிய மார்டின் விக்ரமசிங்க போன்ற ஆசிரியர்களுக்கும் முடியுமானதாக இருந்தது.

உரிமையாளர்களோ அல்லது உரிமை நிறுவனங்களின் பங்குகளை உடையவர்களோ ஊடக உள்ளடக்கங்களை தொடர்ந்தும் கையாளுதல் கூடாது என பாரம்பரிய ஊடகவியலில் ஒரு சம்மதம் உள்ளது. உரிமையாளர் பதிப்பாளராகவும் (Publisher), ஊடகவியலாளரின் பிரதானியாக ஆசிரியருக்குமிடையில் (Editor) சமநிலை ஒன்று நீண்ட காலமாக நிலவி வந்தது. எனினும் தற்பொழுது பெரும்பாலான நாடுகளில் அந்த சமநிலை உருக்குளைந்துள்ளது.

In the Service of Power_ Media Capture and the Threat to Democracy2017இல் அமெரிக்க கொலொம்பிய பல்கலைக்கழகம் வெளியிட்ட புத்தகமொன்றில், ஊடக கைப்பற்றல் மற்றும் அதனால் ஜனநாயகத்துக்கு ஏற்படும் விளைவுகளை பல்வேறு கோணங்களில் விளக்கப்பட்டுள்ளது. (In the Service of Power: Media Capture and the Threat to Democracy) எனும் குறித்த புத்தகத்தை இதனூடாக முழுமையாக பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்: https://bit.ly/2OYwA2F 

இது அதன் அறிமுகத்தின் சாராம்சம்: “சுயாதீன பத்திரிக்கை துறைக்கு தற்பொழுது அச்சுறுத்தல் விடுக்கப்படுவது அரசாங்கத்தினால் விதிக்கப்படும் உத்தியோகபூர்வ செய்தி தணிக்கைகளுக்கு மேலதிகமாக மறைமுகமாக ஊடகங்களை கையாளும் அரசியல் மற்றும் வர்த்தக தேவைகள் என்பவற்றினாலாகும். அண்மைக்காலமாக ஊடக சுதந்திரம் மற்றும் கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரத்துக்காக போராடியவர்களுக்கு தெளிவாகத் தெரியக்கூடிய, இலகுவில் இனங்காணக்கூடிய ‘எதிரி’ அல்லது ‘எதிரிகள்’ சிலர் காணப்பட்டனர். எனினும் தற்பொழுது அது மிகவும் குழப்பமாக மாறியுள்ளது. பார்க்கும் போது தணிக்கை இல்லாமல் பௌதீக ரீதியான தாக்குதல்கள் குறைந்து காணப்படும் நிலைமையில் ஊடக சுதந்திரத்துக்கு உண்மையிலேயே அச்சுறுத்தல் விடுப்பது யார் மற்றும் எவ்வாறு என்பது தொடர்பில் ஆய்வு செய்து அறியவேண்டியுள்ளது. ஊடக சுதந்திரம் ஒரு நாட்டில் உள்ளதா என அளவீடு செய்வதற்கு பயன்படும் குறிகாட்டிகள் விரிவாகவும் நுட்பமாகவும் அமைய வேண்டும். ஏனென்றால் மேலோட்டமாக புலப்படாத ஊடக கைப்பற்றல்களும் அதற்குள் உட்படுத்தப்பட வேண்டும் என்பதனாலாகும்.

உலகில் பல்வேறு நாடுகளில் ஊடக ஆய்வாளர்கள் மற்றும் நிபுணர்கள் 13 பேர் அத்தியாயங்கள் எழுதியுள்ள இந்த புத்தகத்தில், அபிவிருத்தி அடைந்துள்ள மற்றும் அபிவிருத்தி அடைந்துவரும் பல நாடுகளில் காணப்படும் ‘ஊடக கைப்பற்றல்’ தொடர்பில் சாட்சியங்கள் மற்றும் விளக்கங்கள் காணப்படுகின்றன.

Dr. Joseph E Stiglitz
கொலொம்பிய பல்கலைக்கழகத்தில் பேராசியர் ஒருவரான, பிரபல பொறியியலாளர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் (Dr. Joseph E Stiglitz) அவர்களில் ஒருவர். 2001ம் ஆண்டு பொருளியலில் நோபல் பரிசு பெற்ற அவர் தனது அத்தியாயத்தில் ஒரு இடத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

‘ஒரு நாட்டின் நான்காவது பகுதியினராக பார்க்கப்படும் ஊடகம், ஜனநாயக சமூகங்களில் மிகவும் முக்கியமான பொறுப்புகளை கொண்டுள்ளனர் – நாட்டின் ஏனைய பகுதியினரின் பொறுப்புகள் மற்றும் அதிகார சமநிலையை உறுதிப்படுத்துவதற்கு. ஊடங்கள் சுயாதீனமாக இருக்கும் வரை மாத்திரமே இந்த பொறுப்பை சரியான முறையில் செய்யக் கூடியதாக இருக்கும். அரசின் அல்லது வர்த்தக குழுக்களின் அல்லது அரசியல்வாதிகளின் அல்லது வேறு அதிகாரம் படைத்தவர்களின் கைக்குள் அகப்பட்டால் ஊடகங்களுக்கு அந்த தீர்மானம் மிக்க சமூக பொறுப்பை செய்ய முடியாமல் போகும்.’

அவர் மேலும் குறிப்பிடுவதாவது: ‘தமது பயனாளர்களுக்கு ஒரு விடயம் தொடர்பில் முடியுமான அளவு பரவலாக தகவல் வழங்குதல் மற்றும் விளக்கமளிப்பதே ஊடகங்களின் பிரதான பணியாகும். அவற்றை கருத்தில் கொண்டு முடிவுகளுக்கு வருவது பார்வையாளர்களின் வேலையாகும். எனினும் அரசியல் அல்லது வர்த்தக கைப்பற்றலுக்கு உள்ளாகியுள்ள ஊடகங்கள் தீர்மானம் மிக்க சமூக பிரச்சினைகளின் போது சில பகுதியை விட்டுவிடுவதற்கோ அல்லது சில தகவல்களை திரிவுபடுத்துவதற்கோ சந்தர்ப்பம் காணப்படுகின்றது. உரிமையாலர்களுக்கோ அல்லது விளம்பரதாரர்களுக்கோ அல்லது உரிமையாளர்களுக்கு விசுவாசமானவர்களுக்கோ பாதிப்பான செய்திகளை வெளியிடாமல் இருக்கலாம். இந்த முரண்பாடு காரணமாக மிகவும் முக்கியமான விடயங்கள் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்படாமல் மறைக்கப்படலாம்.’

இதற்கு சிறந்த உதாரணமாக 2008 இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை (2008 Financial Crisis) ஸ்டிக்லிட்ஸ் எடுத்துக் காட்டுகிறார். அமெரிக்காவில் ஒரு சில வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மேடு பள்ளம் இல்லாமல் வீட்டுக் கடன்களை வழங்கியதாலேயே இந்த நிலை ஏற்பட்டது. நிதித் துறையில் காணப்படும் ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் சில புலனாய்வு செய்தியாளர்கள் தகவல் திரட்டி வந்ததாலும், தமது சமூக நிலையுடன் என்றும் புழங்கும் பழக்கமான வங்கி உரிமையாளர்களை கடுமையாக விமர்சிக்கும் அறிக்கைகளை வெளியிடுவதை விசேடமாக வியாபார செய்தி முகமையளர்கள் மற்றும் செய்தி ஆசிரியர்கள் வேண்டுமென்றே தவிர்த்தனர். இறுதியில் பாரிய அளவில் கடன்களை திருப்பி செலுத்தாமல் நிதித்துறையே முழுமையான வீழ்ச்சிக்கு உள்ளானது.

ஊடக கைப்பற்றலின் உயர்ந்த நிலையாக அறிவு ரீதியான கைப்பற்றலை (Cognitive Capture) ஸ்டிக்லிட்ஸ் குறிப்பிடுகிறார். அதாவது, (ஆசிரியர்கள் உட்பட) ஊடகவியலாளர்கள் அறிந்தோ அறியாமலோ ஒரு கருத்து தொடர்பில் பாரிய அளவில் பக்கசார்பாக செயற்படுவதாகும். இது தீவிர வலதுசாரி/இடதுசாரி அரசியல், தீவிர தேசியவாதம் அல்லது வெளிப்படையாக சர்வதிகாரம் ஒன்றுக்காக தோற்றம் கொடுப்பது போன்ற பல்வேறு கோணங்களில் உள்ளது.

எமது ஒரு சில ஊடகங்கள் மீண்டும் இந்த நாட்டில் எல்லையற்ற அதிகாரங்கள் கொண்ட அரசாட்சியொன்றை உருவாக்குதல், ‘வெள்ளையர்கள் தந்த ஜனநாயகத்தை’ புறக்கணித்தல் மற்றும் தர்க்கரீதியற்ற முறையில் ராஜபக்ஷ வழிபாட்டில் ஈடுபடுதல் ‘அறிவு ரீதியான ஊடக கைப்பற்றலின்’ ஒரு விளைவா?

எமது நாட்டில் ஒரே உரிமையாளரின் கீழ் காணப்படும் பத்திரிகை நிறுவனத்தின் சில பத்திரிகைகள் நடுநிலையாக காணப்படுவதற்கும், ஏனைய பத்திரிகைகள் கடும் தீவிரமாக காணப்படுவதற்கும் காரணம் இதுவா?

ஊடக கைப்பற்றல் காரணமாக இடம்பெறும் கடும் பக்கசார்பான அறிக்கையிடல்கள் தொடர்பில் ஊடக பயனாளர்களுக்கு செய்யக் கூடியவை வரையறுக்கப்பட்டவையே. அவ்வாறான ஊடகங்களை நிராகரிப்பது ஒரு தெரிவாகும்.

அதேபோன்று சிந்தனா ரீதியாக கைபற்றப்படுள்ள ஊடகங்கள், ஊடக உள்ளடக்கங்களை, அவர்களது கருத்துக்களுக்கு சார்பான தகவல்களை மற்றும் விமர்சனகளை மாத்திரமே பரப்புவதாக நினைவில் வைத்துகொள்ளுதல் முக்கியமானது.

இந்நாட்டின் ஊடக உரிமைத்துவம் தொடர்பான விளக்கமான ஆய்வொன்று ‘வெரிடே ரிசேர்ச்’ சுயாதீன ஆய்வு நிறுவனம் அண்மையில் வெளியிட்ட Media Ownership Monitor (htts://sri-lanka.mom-rsf.org/en/) இணையத் தளத்தில் காணப்படுகின்றது.

Deepanjali Abeywardena
வெரிடே நிறுவனத்தின் ஊடக ஆய்வு பிரதானி தீபாஞ்சலீ அபேவர்தன இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ஊடகங்கள் மூலம் எமக்கு கிடைக்கும் தகவல் மற்றும் விபரங்களின் பின்னணிக் காரணிகளை அறிந்துகொள்ள வேண்டுமானால் ஊடக உரிமைத்துவம் தொடர்பில் நாம் அறிந்திருக்க வேண்டும். ஊடக உரிமைத்துவம் தொடர்பான தரவுகள் வெளிப்படுத்தப்படுவது ஜனநாயகத்துக்கு மிகவும் முக்கியமானது. ஊடகங்களால் தமது பயனாளர்கள் எவ்வாறு சூட்சுமமாக கையாளப்படுகின்றனர் என்றும், அது ஏன் என்பது தொடர்பிலும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.”

உரிமையாளர்களின் அரசியல் மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக ஊடக உள்ளடக்கத்தை கையாளுதல் அண்மைக்காலமாக இடம்பெறுவதை நாம் அறிந்துள்ளோம். எனினும் எமது நாட்டின் ஊடகத்துறையின் அனைத்து முரண்பாடுகளுக்கும் ஒரே காரணம் ஊடக உரிமைத்துவம் அல்ல.

இனவாத, தேசியவாத அல்லது மதவாத ஆசிரியர்கள் காணப்படுவது போன்று தீவிர அடிமட்ட சிந்தனை கொண்ட ஊடக மூத்தவர்கள் பிரதான ஊடகங்களில் தீர்மானம் மிக்கவர்களாக காணப்படுவதும் ஒரு குறைபாடே. அவர்கள் தமது தனிப்பட்ட சிந்தனைகள் மற்றும் அடிமைத்துவத்தை வளர்ப்பதற்காக ஊடகங்களை தவறான முறையில் பயன்படுத்துவது நாம் முகங்கொடுக்கும் ஊடக குறைப்பாட்டின் மற்றுமொரு பாரதூரமான காரணியாகும்.

- நாலக்க குணவர்தன -
தமிழில் : அதுலேகொடுவேகெதர நுஸ்கி

நன்றி : நவமணி (14.12.2018)

No comments: