ஒரு நாட்டின் அபிவிருத்தி வெறுமனே பௌதீக வளங்களின் அவிவிருத்தியால் மாத்திரம் இடம்பெற முடியாது. மாறாக அவிபிருத்தி பூரணப்பட வேண்டுமானால் ஒப்பீட்டடிப்படையில் மனித வளங்களின் அபிவிருத்தியும் ஏற்பட வேண்டும். இவ்வாறான பௌதீக வளம் மற்றும் மனித வளம் உட்பட்ட சமூக அபிவிருத்தியை கொண்டே ஒரு நாட்டின் அபிவிருத்தியை அளவிட முடியும்.
அபிவிருத்தியை இலக்காக கொண்டு எந்தளவு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டாலும் அதன் பூரண பயனை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அபிவிருத்தி என்பது மக்களின் உண்மையான தேவையாக மாறவேண்டும். மேலும் இடம்பெறும் அபிவிருத்தி திட்டங்கள் மீது அதன் பயனர்களின் மற்றும் நாட்டு மக்களின் நம்பிக்கை ஏற்படவேண்டும். சாதக மனப்பாங்கு ஏற்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் அபிவிருத்தியின் பிரதிபலன்களை மக்களை சென்றடையச் செய்து நாட்டில் சமூக அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும்.
சமூக அபிவிருத்தியை ஏற்படுத்துவதில் சமூகப்பணியின் பங்களிப்பு மிக அவசியமான ஒன்றாக தற்பொழுது உலகம் பூராகவும் கருதப்படுகின்றது. அபிவிருத்தி அடைந்த நாடுகளை நோக்கும் போது அவற்றின் அபிவிருத்தியில் சமூகப் பணியின் பங்கு முக்கிய இடம்பிடித்திருப்பதை கண்டுகொள்ளக் கூடியதாகவுள்ளது. எமது நாட்டைப் பொருத்தவரையிலும் சமூகப் பணியின் அவசியம் அதிகரித்துச் செல்வதை உணரக்கூடியதாகவுள்ளது.